தென்காசி : செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி தலைவியை, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டதையடுத்து, இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியின் 24 கவுன்சிலர்களில் அ.தி.மு.க.,வினர், 10, பா.ஜ.,வினர், 5 பேர் உள்ளனர். தி.மு.க., கவுன்சிலர்கள் குறைவு.
சுயேச்சையாக வெற்றி பெற்ற ராமலட்சுமியை அ.தி.மு.க., - பா.ஜ., கவுன்சிலர்கள் தலைவியாக தேர்வு செய்தனர். ஆனால் அவர் சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார். அதன் பிறகு நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கவில்லை.
இந்நிலையில், நகராட்சியில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவுன்சிலர்கள், நகராட்சி தலைவி ராமலட்சுமியை சந்தித்து, நகராட்சி கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது தலைவருக்கும், அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்து தடுத்தனர்.
நகராட்சி தலைவி ராமலட்சுமி மீது அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போலீசில் புகார் அளித்தனர். பதிலுக்கு அவர்கள் மீது, ராமலட்சுமி புகார் அளித்தார்.
இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!