பகல் 12:30 - 3:30 நடை சாத்த திருவண்ணாமலை குருக்கள் மனு
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மதியம், 12:30 மணிக்கு சாத்தப்படும். மாலை, 3:30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு, 9:00 மணிக்கு சாத்தப்படும்.
கொரோனா தொற்று துவங்கியதற்கு முன் இந்த நேரம் தான் வழக்கத்தில் இருந்தது. தொற்று காலத்தில், பக்தர்கள் இடைவெளி விட்டு தரிசனம் செய்ய வசதியாக, அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
இரவு, 9:00 மணி வரை திறக்கப்பட்டிருந்தது. கொரோனா குறைந்து, இயல்பு நிலை திரும்பிய போதும், அதே நடைமுறையை கோவில் நிர்வாகம் பின்பற்றியது.
இந்நிலையில், கோவிலில் பணிபுரியும் குருக்கள், கோவில் இணை ஆணையர் குமரேசனிடம், 'ஆகம விதிப்படி நடை திறந்து மூடப்பட வேண்டும். பகல் 12:30 மணி முதல் மாலை, 3:30 மணி வரை நடை மூடப்பட வேண்டும்' என, நேற்று முன்தினம் மனு அளித்தனர்.
இதை ஏற்ற கோவில் இணை ஆணையர், கோவில் நடையை நேற்று, 12:30 மணிக்கு சாத்தினார். இதற்கு, பக்தர்களிடையே எதிர்ப்பு எழுந்தது. எனவே, மீண்டும், 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
'தற்காலிகமாக நடை சாத்தப்படாத முறை பின்பற்றப்படும். அறநிலையத்துறை ஆணையர், அமைச்சரிடம் அனுமதி பெற்று, மதிய நேரத்தில் நடை சாத்தப்படும் முறை அமல்படுத்தப்படும்' என, இணை ஆணையர் கூறினார். இதை குருக்கள் ஏற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!