புதுச்சேரி : திருக்குறளை தேசிய நுாலாக மத்திய அரசு அறிவிக்க கோரி சட்டசபையில் ஒருமனதாக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபை கூட்டத் தொடரின் இறுதிநாளான நேற்று தி.மு.க., எம்.எல்.ஏ., அனிபால்கென்னடி திருக்குறளை தேசிய நுாலாக மத்திய அரசு அறிவிக்க கோரி தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், திருக்குறள் நமது நாட்டின் தேசிய நுாலாக அறிவிக்க அனைத்து தகுதிகளையும் கொண்ட நுாலாகும்.
இந்நுால் 14 ஐரோப்பிய மொழிகளிலும், 10 ஆசிய மொழிகளிலும், 14 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள உன்னத நுால். இது எந்த மதத்திற்கும், எந்த கடவுளுக்கும் கட்டுக்குள் அடங்காத, அனைவருக்கும் பொதுவான சிறந்த மறைநுால். ஓர் மொழிக்குள் திருக்குறளை சுருக்கிவிட முடியாது.
எனவே திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை புதுச்சேரி சட்டசபை வலியுறுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து திருக்குறளை தேசிய நுாலாக்க வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், செந்தில்குமார், நாக தியாராஜன், நேரு, சிவசங்கர், ராமலிங்கம், வெங்கடேசன், விவிலியன் ரிச்சர்டு, ஜான்குமார் பேசியதோடு, மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்கு கூறும் அறிவுரை தான் திருக்குறள் என்றும், திருக்குறள் ஒரு உலக பொதுமறை நுால் என புகழாரம் சூட்டினர்.
தொடர்ந்து அத்தீர்மானத்தின் மீது முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: திருக்குறளில் இல்லாத வாழ்வியல் கருத்துகளே இல்லை. இரண்டு அடியில் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை கருத்துகளும் பொதிந்துள்ளது.
வள்ளுவர் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது நமது நாடு. வாழ்வில் மனிதர்கள் செம்மையாக வேண்டும் எனில் திருக்குறள் எனும் ஒரு நுாலை மட்டும் படித்தால் போதும். திருக்குறளை நமது பிரதமர் அடிக்கடி மேற்கோள் காட்டி பேசிவருகிறார். திருக்குறளின் பெருமையை நாம் உணர வேண்டும்.
ஆகவே எம்.எல்.ஏ., க்கள் கோரிக்கையை ஏற்று திருக்குறளை தேசிய நுாலாக்க மத்திய அரசை கோரும் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்றார். முதல்வர் பேச்சை அடுத்து திருக்குறளை தேசிய நூலாக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் செல்வம் அவையில் அறிவித்தார். அதை எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
முன்னதாக அரசே திருக்குறளை தேசிய நூலாக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்ததால், அனிபால் கென்னடி தான் கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெற்றார்.
அத்துடன் பொதுமக்கள் கூடும் இடங்களில்,அரசு அலுவலகங்களில் திருக்குறள் கருத்தினை இடம் பெற செய்யலாம். ஏற்கனவே திருவள்ளுவர் பெயரில் உள்ள இடங்களை பளீச்சென மாற்றலாம் எனவும் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!