மாநகராட்சியில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை மேயர் நாகராஜன், கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், கவுன்சிலர்கள் முன்னிலையில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தாக்கல் செய்து பேசியதாவது: 2023-24 நிதியாண்டில் வரவினங்களில் ரூ.418.44 கோடி சொந்த வருவாயாகவும், ரூ.1093.77 கோடி அரசின் பல திட்டங்களில் கிடைக்கும் மானியமாகவும், ரூ.189.04 கோடி திட்டங்களுக்கான கடன் என மொத்தமாக ரூ.1751.25 கோடியாக வருவாய் இருக்கும்.
செலவினங்களில் ரூ.418.29 கோடி பணியாளர், நிர்வாகம், ரூ.1151.47 கோடி மூலதனம், 168.43 கோடி இயக்கம், பராமரிப்பு, ரூ.13.63 கோடி கடன் செலவு என மொத்தம் ரூ.1751.82 செலவு இருக்கும். வரவு, செலவை ஒப்பிடுகையில் ரூ.56.21 லட்சம் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படும்.
கவுன்சிலர்கள் கோரிக்கையை ஏற்று இந்த நிதியாண்டில் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். சென்னை தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனம் வழங்கிய ரூ.3.64 கோடியில் 9 மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிவறைகள் கட்டப்படும். புதிதாக 2 ஆரம்ப சுகாதார மையங்கள் கட்டப்படும். ரூ.71.75 கோடியில் 131 கி.மீ.,க்கு ரோடு அமைக்கப்படும். கவுன்சிலர்களுக்கு அவரவர் வார்டில் அலுவலகம் கட்டி தரப்படும். மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.
மண்டல தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, துணை கமிஷனர் முஜிபூர் ரஹ்மான், நகர் பொறியாளர் அரசு, உதவி கமிஷனர்கள் காளிமுத்தன், வரலட்சுமி, மனோகரன், திருமலை சையது முஸ்தபா கமால், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் பங்கேற்றனர். காங்., தலைவர் ராகுல் எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சி கவுன்சிலர்கள் கறுப்பு உடையில் வந்திருந்தனர்.
பற்றாக்குறையை சமாளிக்கலாம்.
மதுரை மாநகராட்சியில் இந்த நிதியாண்டிலும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பற்றாக்குறையை சமாளிக்க மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களுக்குரிய வாடகை, சொத்து வரியை முறையாக வசூலிக்க வேண்டும். குறைந்த பரப்பளவுள்ள கட்டடங்களுக்கு அதிக வரியும், அதிக பரப்பளவுள்ள கட்டடங்களுக்கு குறைந்த வரி என்ற முரண்பாடுகளை சரி செய்தாலே பல மடங்கு வருமானம் வரும். 'வரி கட்டவே மாட்டேன்' என அடம் பிடிப்போரிடம் கறாராக வசூல் செய்ய வேண்டும். வருவாய் இனங்களை இனம் கண்டு வசூலித்தால்தான் அடுத்த நிதியாண்டில் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யலாம். ///
மாட்டுத்தாவணியில் வெங்காய மார்க்கெட்.
மதுரை மாட்டுத்தாவணியில் இரண்டு பஸ்ஸ்டாண்டுகள், மீன், காய்கறி, பழம், பூ மார்க்கெட் இருப்பதால் நாள்முழுவதும் நெரிசலுக்கு பஞ்சமில்லை. இந்நிலையில் கீழமாரட் வீதியில் உள்ள வெங்காய மார்க்கெட்டையும் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் அருகே மாற்றப்பட உள்ளது. இதற்காக ரூ.10.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இடநெருக்கடியில் தவிக்கும் காய்கறி மார்க்கெட்டை மாநகராட்சிக்கு சொந்தமான வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும். அரசு மருத்துவமனை எதிரே பல்லடுக்கு வாகன காப்பகம் அமைக்கும் திட்டம் அருமை. அருகில் உள்ள மினி பஸ்ஸ்டாண்டையும் மேம்படுத்த நடவடிக்கை வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!