தமிழகத்தில், 23 ஆயிரத்து, 149 அனைத்து வகை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இதில், 4,684 சங்கங்களுக்கான பதவி காலம், ஏப்., 2ல் முடிகிறது. 13 ஆயிரத்து, 784 சங்கங்களுக்கான பதவி காலம், ஆக., மாதம் முடிகிறது. கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த, கடந்த ஜன., மாதம் ஆயத்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, ஏப்., மற்றும் ஆக., மாதங்களில் தேர்தல் நடத்த, கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதனால், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தி.மு.க., பிரமுகர்கள் பலரும், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள் பதவியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இச்சூழலில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் சண்முகம் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், 'இறந்த உறுப்பினர்களின் பெயர்களை நீக்குவதோடு, தகுதியுள்ள உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதன்பின், உறுப்பினர் பட்டியல் வெளியிட்டு, கூட்டுறவு தேர்தல் நடத்த வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார். இவ்வழக்கு இன்று (30ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
செயலாட்சியர் நியமனம்
அதேநேரம், 4,684 கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான பதவி, ஏப்., 2ல் முடிகிறது. அச்சங்கங்கள் தொடர்ந்து செயல்படுவற்கு, செயலாட்சியர்கள் நியமிக்க, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'தேர்தல் அட்டவணை, மார்ச் 11க்குள் வெளியிட்டிருக்க வேண்டும்.
தேர்தல் அட்டவணை இன்னும் வெளியிடாததால், ஏப்., 3 முதல், 6 மாதங்களுக்கு அல்லது புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கும் வரை, எது முந்தையதோ, அதுவரை செயலாட்சியர் நியமிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
உறுப்பினர் பட்டியல்
அடுத்த கட்டமாக, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்ய, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, இறந்த உறுப்பினர்கள் மற்றும் தகுதியற்ற உறுப்பினர்களை நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவ., 15க்குள் உறுப்பினர் பட்டியலை இறுதி செய்ய கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நவ., மாதம் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தீர்ப்பு வர வேண்டும். இறந்த உறுப்பினர்களை நீக்கி, புதியவர்களை சேர்த்து, புதிய உறுப்பினர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும்.
இதன் பிறகே, தேர்தல் நடத்த முடியும் என்பதால், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்களாகும் கனவில் மிதந்த தி.மு.க., பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து (2)
BJP அதிக இடங்களில் போட்டி போடவேண்டும். எல்லா இடங்களிலும் கேன்வாஸ் செய்யவேண்டும்.
ஒருவருக்கு ஒரு ஓட்டு (கூட்டுறவு, ஊராட்சி, சட்ட பேரவை, பாராளுமன்றம்) வேளாண் கூட்டுறவு உறுப்பினர் விவசாய நிலம் வைத்து இருக்க வேண்டும். அல்லது விவசாயி என்று சான்று பெற்று இருக்க வேண்டும். முன்னோர்கள் குல தொழிலாக இருக்க வேண்டும். ஊராட்சி வரை சுயேட்சை தான் போட்டியிட வேண்டும். கட்சி சார்பாக போட்டி கூடாது. கூட்டுறவு நாட்டு உயர்வு.