31 அறிவிப்புகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை
இந்த செய்தியை கேட்க
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயகுமார்: கடந்த 2021 - 22ம் ஆண்டு பட்ஜெட்டில், '1,000 தடுப்பணைகள் கட்டப்படும்' என அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கடந்தும், அறிவிப்பாகவே உள்ளது.
அதேபோல், 'அமராவதி, பேச்சிப்பாறை அணை நீர் கொள்ளளவை, பழைய நிலைக்கு உயர்த்த, அரசு திட்டம் வகுக்கும். நீராறு, பாண்டி ஆறு உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் திட்டத்தை செயல்படுத்த, கேரள அரசுடன் பேச்சு நடத்தும்.
பல்வேறு வங்கிகளில் நிதியுதவி பெற்று, சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்' என அரசு அறிவித்தது. இவை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?
அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்த பழனிசாமி, குடிமராமத்து திட்டத்துக்கு உயிரூட்டி, நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை எடுத்தார். இத்திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விட்டு விட்டீர்களோ என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது.
நீர் நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், வருவாய் துறை, சுரங்கத் துறை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 31 அறிவிப்புகள், நீர்வளத் துறை தொடர்புடையவை. அதில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயகுமார் பேசுகையில், ''வட மாநிலத் தொழிலாளர்கள் பிரச்னை, அ.தி.மு.க., ஆட்சியில் வரவில்லை. கொரோனா காலத்தில், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு, 'அம்மா உணவகம்' வழியாக உணவு வழங்கப்பட்டது,'' என்றார். சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, ''வட மாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக புரளி கிளப்பி, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.அமைச்சர் துரைமுருகன் எழுந்து, ''அடங்கி போன விஷயத்தை, மீண்டும் கிளறுகிறார்,'' எனக் கூற, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ''இனிமேல் நடக்கக் கூடாது என்பதற்காக கூறுகிறார்,'' என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!