ஹைவேஸ் வைத்த நடுத்திட்டு; மக்களிடம் கிடைக்குது திட்டு!
கோவை: சிறுவாணி மெயின் ரோட்டில், இரவோடு இரவாக வைத்த 'டிவைடர்', வளைந்து நெளிந்து இருப்பதால், நிறைய விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும், ரோடுகளை விரிவாக்கம் செய்து, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இவற்றில் மாநில நெடுஞ்சாலைத்துறையால், 16 ரோடுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றாக, சிறுவாணி மெயின் ரோடும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பல ஆண்டுகளாக மோசமாக இருந்த செல்வபுரம் - பேரூர் ரோடு, சமீபத்தில் சீரமைக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த ரோட்டில், 'டிவைடர்' எனப்படும் நடுத்திட்டு வைக்கப்பட்டு, ஆங்காங்கே பாதைக்கான இடைவெளியும் விடப்பட்டுள்ளது.
ஆனால் நேராகச் செல்லும் இந்த ரோட்டில், இந்த 'டிவைடர்' மட்டும் பல இடங்களில் குறுக்கும் நெடுக்குமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், இதற்கேற்ப வளைந்து நெளிந்து பயணிக்க வேண்டியுள்ளது.
நேராக ரோடு இருக்கும் என்ற நம்பிக்கையில், மற்ற வாகனங்களைக் கடந்து செல்லும் வாகனங்கள், இந்த நடுத்திட்டில் மோதி விழும் அபாயம் உள்ளது. இதனால் சிறுசிறு விபத்துகளும் நடக்கத் துவங்கியுள்ளன.
அனுபவமில்லாத ஆட்களைக் கொண்டு, இரவோடு இரவாக வைக்கப்பட்டுள்ள இந்த டிவைடர்களால் பாதிக்கப்படும் மக்கள், ஹைவேஸ் அதிகாரிகளைத் திட்டிச் செல்கின்றனர்.
இதே ரோட்டில், கோட்டின் இரு புறத்திலும் அமைக்கப்பட்ட வடிகால் பணிகளும், பாதியுடன் நிறுத்தப்பட்டுள்ளன.
அரைகுறையாகவும், அவசர கதியிலும் நடந்துள்ள இந்தப் பணிகளைச் சரி செய்து, வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பாதுகாப்பான ரோடாக மாற்ற, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் முக்கியக் கடமை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!