அடுத்தடுத்து இறக்கும் சிறுத்தை யானை புலிகள் காப்பகத்தில் மரம் கடத்தலால் பேரழிவு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு துவங்கி முண்டந்துறை வரை புலிகள் காப்பக் உள்ளது. முண்டந்துறை வனத்தில் 20 வயது பெண் யானை இறந்தது வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தது. யானை இறந்து 10 நாட்களுக்கும் மேலானதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. வனத்துறையினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.
களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் தான் பாபநாசம் அணைக்கட்டு அகஸ்தியர் அருவி சொரிமுத்தைய்யனார் கோயில் உள்ளன. அங்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் பல தடைகளை விதித்துள்ளனர். ஆனால் மரங்கள் கடத்தப்படுவதும் வனவிலங்குகள் காரணம் இன்றி இறந்து போவதும் தொடர்கிறது.
வைரம் கடத்தல்
களக்காடு அருகே மஞ்சுவிளை சுசில்குமார் 57. கீழப்பத்தை வேல்முருகன் 42. இவர்களிடம் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள அரை கிலோ எடையுள்ள வைரக்கல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வைரக்கல் களக்காடு மலைப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன் தோண்டியெடுக்கப்பட்டது என கூறினர்.
வைரக்கல்லின் உண்மை தன்மையை திருச்சி நிறுவனத்தில் சோதனை செய்து அதற்கான உண்மைத்தன்மை சான்றிதழையும் வைத்துள்ளனர். ஆனால் வனத்துறையினர் வைரக்கல்லை வாங்க மறுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டினர்.
மணிமுத்தாறு மலைப்பகுதியில் மார்ச் 4 சிறுத்தை தாக்கியதில் தேயிலை தோட்ட பெண் தொழிலாளி காயமுற்றார். தொடர்ந்து சில நாட்களில் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. வனத்துறையினர் அங்கேயே அதனை பிரேத பரிசோதனை செய்து எரித்தனர்.
புலிகள் சரணாலய பகுதியில் மாலை 6:00 மணிக்கு பின் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் மத்தளம் பாறை அருகே யானைகள் வழித்தட
பகுதியில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பினை ஒரு மாதமாக நடத்தி வருகின்றனர். தினமும் லாரிகள் வாகனங்கள் வந்து செல்கின்றன. ஒரு கோயில் போன்ற செட் அமைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் இரவை பகலாக்கும் ஜெனரேட்டர் மின் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இது குறித்து வனஆர்வலர்கள் புகார் தெரிவித்தும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாபநாசம் அடர் வனப்பகுதியில் இருந்து தேக்கு மரங்கள் வெட்டி லாரிகளில் கடத்தப்பட்டன. அதனை வனத்துறையின் சிறப்பு கண்காணிப்பு பறக்கும் படை அதிகாரிகள் வந்து கைப்பற்றினர். பிறகு பிடிபட்ட லாரிக்கு ரூ.25000 மட்டுமே அபராதம் விதித்து அனுப்பினர்.
வன ஆர்வலர்கள் கூறியதாவது: புலிகள் காப்பக வனப்பகுதியில் தேக்கு மரங்கள் வெட்டஅனுமதி கிடையாது. கலெக்டர் தலைமையிலான குழுவினரின் அனுமதி பெற வேண்டும். தனியார் எஸ்டேட் மரங்கள் எனக் கூறி தேக்கு மரங்கள் அரசின் முத்திரை இல்லாமல் கடத்தப்படுகின்றன.
தமிழகத்தின் வற்றாத ஜீவநதி தாமிரபரணி என பெயர் வருவதற்கு காரணமாக இருப்பது பாபநாசம் காரையாறுமுண்டந்துறை வனப்பகுதியில் உள்ள அடர் மரங்கள் தான். அந்த மரங்களை பத்து நாட்களாக தொடர்ந்து வெட்டி கடத்தினர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மரம் கடத்தல் உள்ளிட்டவை குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!