வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு மாணவர்கள் பலி
ஈரோடு, மணல்மேடைச் சேர்ந்த இருதயராஜ் மகன் ரோஷன் பிஜி, 19; ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி, பி.காம்.,- சி.ஏ., இரண்டாமாண்டு மாணவன். இவர், 'பஜாஜ் பல்சர் பைக்'கில், ஈரோடு - சென்னிமலை சாலையில் நேற்று முன்தினம் மாலை சென்றார்.
பழைய 'கூட்ஸ் ஷெட்' பகுதியை கடக்க முயன்றபோது, 'ஹாரன்' அடித்தபடி வந்த தனியார் பள்ளி வாகனத்துக்கு வழிவிட, பைக்கை இடது புறம் ஒதுக்கினார். அங்கு சாலை அமைக்க குழி தோண்டப்பட்டிருந்தது.
இதில், நிலை தடுமாறிய ரோஷன் பிஜி, பஸ் பின்புற சக்கரத்தில் விழுந்தார். சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் இறந்தார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பள்ளி மாணவன் பலி
ஈரோடு, வெட்டுகாட்டு வலசு, காமதேனு நகரைச் சேர்ந்த 'வெல்டிங்' தொழிலாளி அறிவழகன் மகன் தர்ஷன், 13; அரசுப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன்.
நேற்று முன்தினம் பள்ளி செல்லாமல், நண்பனுடன் அதே பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு நீச்சல் பழக சென்றார்.
ஆழம் தெரியாமல் வாய்க்காலில் இறங்கிய தர்ஷன், தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார். தீயணைப்பு நிலைய வீரர்கள் சடலத்தை மீட்டனர். கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!