பட்டாசு உற்பத்தி ஆலைகள் செயல்பட தற்காலிக தடை! 9 பேர் பலியால் கலெக்டர் நடவடிக்கை
படுகாயமடைந்த, 18 பேரில், 10 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், ஆறு பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும், இருவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட்டாசு ஆலை அருகே மேய்ச்சலில் இருந்த பசு மாடு ஒன்றும் காயமடைந்து இறந்துள்ளது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தமிழக அரசு சார்பில், தலா 3 லட்சம் ரூபாயும், மத்திய அரசு சார்பில், தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களையும், அவர்களது குடும்பத்தாரையும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுதும், இந்த வெடி விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலரிடம், 2024ம் ஆண்டு வரை, உரிய அனுமதி பெற்று இந்த பட்டாசு உற்பத்தி ஆலை செயல்பட்டாலும், எந்தவித விதிமுறைகளும் பின்பற்றவில்லை என்பது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.
அதாவது, ஆறு பேர் மட்டுமே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளன; ஆனால், 27 பேர் பணியாற்றியுள்ளனர். அதில், கவுதம் என்ற 15 வயது சிறுவனும் பணியாற்றி வந்துள்ளான்.
வெடி மருந்துகளை கையாள தெரியாத நபர்கள் இப்பணிகளில் ஈடுபட கூடாது என, விதிமுறைகள் தெளிவாக உள்ளன. ஆனால், சிறுவன், பெண்கள் என பலரும் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல போதிய இட வசதி இல்லாத நிலையில், பேன்சி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்ய கூடாது. ஆனால், போதிய இடமில்லாத இங்கு, கோவில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தப்படும் பேன்சி ரக பட்டாசுகளையே பெருமளவில் தயாரித்துள்ளனர்.
ஏராளமான விதிமீறல்களுடன் இயங்கி வந்த நிலையில், பெரும் வெடி விபத்து ஏற்பட்டதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் பிற, பட்டாசு உற்பத்தி ஆலைகளில், உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், முசரவாக்கம், மானாம்பதி மற்றும் சுருட்டல் ஆகிய மூன்று பகுதிகளில் செயல்படும், பட்டாசு உற்பத்தி ஆலைகளில், பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக உள்ளனவா என்பதை கண்காணிக்க, வருவாய் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த பட்டாசு உற்பத்தி ஆலை, தொடர்ந்து நடக்க கூடிய பட்டாசு ஆலை இல்லை. ஆர்டர் வந்தால் மட்டும் இந்த ஆலையை இயக்கி வந்துள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் உரிய விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.
விபத்து குறித்து விசாரிக்க, கலெக்டர் உத்தரவின்பேரில் விசாரணை நடக்கும். அதாவது, போலீஸ், தீயணைப்பு, உரிமையாளர், பொதுமக்கள், ஆலையில் வேலை பார்த்தவர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரையும் விசாரிப்போம்.
அப்போது தான், உண்மை என்னவென்று தெரியவரும். இந்த ஆலையில், ஆறு பேர் மட்டுமே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 27 பேர் பணியாற்றி வந்துள்ளனர். அதுவே விதிமீறல் தான். இந்த ஆலைக்கு, 2024 ம் ஆண்டு வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ஆனால், விதிமுறைகள் சரிவரை பின்பற்றவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 52 பட்டாசு விற்பனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
l கழிவு வெடிகளை உற்பத்தி அறைகளின் வெளியே இருப்பு வைக்க கூடாது
l உற்பத்தி அறைகளில் மொபைல்போன், ரேடியோ போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது
l சிகரெட், பீடி போன்றவை பயன்படுத்த கூடாது
l ரசாயன பொருட்களை தலையில் சுமந்து செல்லக்கூடாதுl ஆனி, சுத்தி போன்ற இரும்பு பொருட்கள் பட்டாசு அருகில் வைத்திருக்க கூடாது
l தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள் கூட வைக்க கூடாதுl பட்டாசு உற்பத்தி பற்றி தெரியாத ஊழியர்களை, பணிக்கு ஈடுபடுத்த கூடாது. --------------------------------
l 2006ல் காஞ்சிபுரம் அருகே வையாவூரில், நடந்த வெடி விபத்தில், மூன்று பேர் பலி
.l 2014ல் வையாவூரில் அதே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில், ஆறு பேர் பலி .
l 2017ல் கலெக்டர் அலுவலகம் அருகே பள்ளத்தெருவில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து இருவர் படுகாயம்.
l 2018ல் காஞ்சிபுரம் நாகலுத்து தெருவில், பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் பலி.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!