வனத்துறையின் முந்திரி தோட்ட ஏலம் பங்கேற்காமல் நழுவிய குத்தகைதாரர்கள்
செங்கல்பட்டு சமூக வன கோட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளில், 740 ஏக்கர் பரப்பளவில், முந்திரி தோட்டங்கள் உள்ளன.
இந்த தோட்டங்களில் உள்ள முந்திரியை பறிப்பதற்காக, 2022 -- 23ம் நிதி ஆண்டிற்கான பொது ஏலம், நேற்று நடக்க இருந்தது.
இதற்காக பதிவு செய்யப்பட்ட 68 குத்தகைதாரர்களுக்கு, வனத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அரசு நிர்ணயம் செய்த தொகை அதிகப்படியாக இருந்ததால், பெரும்பாலான வன குத்தகைதாரர்கள் ஏலத்தில் பங்கேற்கவில்லை.
ஐந்து பேர் மட்டுமே பங்கேற்று, அரசு நிர்ணயம் செய்த தொகை அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டனர். இதனால், நிர்ணய தொகையை மாற்றியமைக்க, அரசுக்கு கடிதம் அனுப்பி, மற்றொரு நாளில் ஏலம் நடத்தப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத குத்தகைதாரர் ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, வன குத்தகைதாரர்கள் ஏலத்தில் பங்கேற்பர். ஏலத்திற்கு முன்பே, முந்திரி தோட்டங்களை அவர்கள் பார்வையிட்டனர்.
அரசு நிர்ணயம் செய்த தொகைக்கு ஏற்ற அளவு முந்திரி விளைச்சல் இல்லாததால், பலர் ஏலத்தில் பங்கேற்கவில்லை. பெரும்பாலும், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே முந்திரி ஏலத்தில் பங்கேற்பர். அவர்களும் பங்கேற்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!