Advertisement

குப்பை கிடங்கில்லாத நகரமாகிறது சென்னை ஜோர்! கொடுங்கையூரில் ரூ.648 கோடியில் பயோ மைனிங்

ADVERTISEMENT
சென்னை, :சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை, 'பயோ மைனிங்' முறையில் மீட்பதற்காக, 648 கோடி ரூபாய்க்கான 'டெண்டரை' மாநகராட்சி அறிவித்துள்ளது. இதேபோல், பெருங்குடி குப்பைக் கிடங்கு பணிகள் 65 சதவீதம் நிறைவடைந்து உள்ளதால், அடுத்த மூன்று ஆண்டுகளில் குப்பைக் கிடங்கு இல்லாத மாநகராக சென்னை மாற்றப்பட உள்ளது.

சென்னை, பெருங்குடி குப்பைக் கிடங்கு, 225.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.

கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கொட்டப்பட்டு வருவதால், 34.02 லட்சம் கன மீட்டர் அளவில், பல்வேறு வகையான குப்பை குவிக்கப்பட்டுள்ளது.

இந்த குப்பையை, 'பயோ மைனிங்' முறையில், 350.65 கோடி ரூபாய் செலவில் அகழ்ந்தெடுத்து, நிலத்தை மாநகராட்சி மீட்டு வருகிறது. இதில், 65 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 2024 ஏப்., மாதத்திற்குள், பணிகள் முழுமையாக முடிவடைய உள்ளது.

இதைத்தொடர்ந்து, வடசென்னை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் திடக்கழிவுகளை அகற்றும் பணியில், மாநகராட்சி ஈடுபட உள்ளது. கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, 342.91 ஏக்கர் பரப்பளவு உடையது. இதில், 252 ஏக்கர் பரப்பளவில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது.

தற்போது திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்துார், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பை, இங்கு கொட்டப்பட்டு வருகிறது.

இதனால், 66.52 லட்சம் கன மீட்டர் அளவிலான குப்பை, மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. குப்பைக் கழிவுகளால், நிலத்தடி நீரில் ரசாயன தன்மை அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதற்கு தீர்வு காணும் வகையில், அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., வல்லுனர்கள் ஆலோசனைப்படி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை, 'பயோ மைனிங்' முறையில் அகழ்ந்தெடுத்து மீட்கும் பணிக்கு, ஆறு தொகுப்புகளாக மாநகராட்சி 'டெண்டர்' அறிவித்து உள்ளது.

இதற்காக, மத்திய அரசு நிதியாக 160 கோடி ரூபாய், மாநில அரசு 102 கோடி ரூபாய், சென்னை மாநகராட்சி 378 கோடி ரூபாய் என, 648.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 251.9 ஏக்கர் நிலம் மீட்கப்பட உள்ளது. மேலும், இதற்கான, 'ஆன்லைன் டெண்டர்' தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ஆறு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, அதற்கான மதிப்பு தொகையும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் மே 10, மாலை 3:00 மணிக்குள், விருப்பம் உள்ளவர்கள் tntender.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் மகேசன் கூறியதாவது:

பெருங்குடி குப்பைக் கிடங்கு நிலம், அடுத்த ஆண்டுக்குள் மீட்கப்பட்டு, அதில் 100 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்கப்படும். மீதமுள்ள இடங்களில் குப்பையை மறுசுழற்சி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அதேபோல், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, வரும் 2026க்குள் மீட்கப்பட்டு, அங்கும் பசுமை பூங்கா, குப்பையை கையாள்வதற்கான வசதிகள் அமைக்கப்படும்.

இந்த இரண்டு குப்பைக் கிடங்குகள் மீட்கப்பட்ட பின், குப்பைக் கிடங்கு இல்லாத மாநகராக சென்னை இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (3)

  • Godyes - Chennai,இந்தியா

    இருக்கற காடுகளையே சரியா காப்பாத்த வில்லை.இதல பூங்கா வேறயா. கழிவு மக்கிய மண்ணை ஆறுகளில் கொட்டினால் வெள்ளத்தில் வடிக்கப்பட்டு ஆறுகளில் மணல் பெருகும்.

  • Godyes - Chennai,இந்தியா

    கிடங்குகளில்அகழ்ந்தெடுக்கும் முப்பது வருடக்குப்பை கழிவுகள் மக்கி மண்ணோடு மண்ணாகி இருக்கும். அதை தோண்டி ஆறுகளில் கொட்டினால் அவை மழை வெள்ளத்தில் கரைந்து கடலில் கலந்து மறையும்.

  • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

    100 ஏக்கர்ல் பூங்கா மற்றும் நட்டு வகை மரங்கள் நட்டால் அரசிற்கு மதிப்பு கூடும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement