கட்டாய திருமணத்துக்கு பெண்ணை கடத்திய அ.தி.மு.க., பிரமுகர் கைது
திருவொற்றியூர், காதலித்த பெண்ணை, கட்டாய திருமணம் செய்ய முயன்ற அ.தி.மு.க., பிரமுகரை, போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர், பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன், 28. அ.தி.மு.க., பிரமுகரான இவர், உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த, 24 வயதான எம்.பி.ஏ., பட்டதாரி பெண், ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இருவரும், நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த பெண் பிரிந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த கோகுல கிருஷ்ணன், 21ம் தேதி காலை, அந்த பெண்ணை வலுகட்டாயமாக காரில் ஏற்றி பாண்டிச்சேரி சென்றுள்ளார்.
இது குறித்து, சாத்தாங்காடு காவல்நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் படி, உதவி ஆய்வாளர் நந்த குமார் தலைமையில் தனிப்படை அமைத்து, பெண்ணை தேடி வந்தனர்.
பாண்டிச்சேரி, கோட்டை குப்பம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கோகுல கிருஷ்ணனை கைது செய்த போலீசார், அந்த பெண்ணையும் மீட்டு, சாத்தாங்காடு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
தொடர் விசாரணையில், அப்பெண், தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக, பாண்டிச்சேரிக்கு கடத்தி சென்றதாக வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து, கோகுல கிருஷ்ணன் மீது ஆள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மதியம் சிறையில் அடைத்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!