திருவொற்றியூர் தனியார் நிறுவனம், மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து, கம்பி வேலி அமைத்த சம்பவம் குறித்து, அதிகாரிகள் 'வாய் திறக்காதது' கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, திருவொற்றியூர் மண்டலம், ஏழாவதுவார்டு, எம்.ஜி.ஆர்., நகர் அருகே, சாத்தாங்காடு ஏரிக்கு இடையே செயல்படும் தனியார் பெட்ரோலியபொருட்கள் தயாரிக்கும் நிறுவனம், சமீபத்தில் முகப்பு பக்கங்களில் அழகுபடுத்தும் பணி மேற்கொண்டது.
அப்போது, 2625 அடி துாரமுள்ள சுவருக்கு வண்ணம் தீட்டி, புல் தரை அமைத்ததோடு, சாலையோரம் இருந்த மழைநீர் வடிகாலையும் ஆக்கிரமித்து, கம்பி வேலி அமைத்து விட்டது.
இரு இடங்களில் கதவுகள் அமைக்கப்பட்டு, வேலிக்குள் யாரும் புகாதபடி பூட்டு போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சாத்தாங்காடு ஏரியுடன் பிரதான மழை நீர் வடிகாலில் ஏற்படும் பிரச்னைகள்குறித்து ஆராய்வதில் சிக்கல் எழுகிறது.
இது குறித்து, நம் நாளிதழில் சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியாகின. இருப்பினும், மாநகராட்சி அதிகாரிகள் மவுனம் சாதிப்பதால், சந்தேகம்எழுவதாக, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அழகுபடுத்தும் பணியாக இருந்தாலும், பொது பயன்பாட்டில் உள்ள மழைநீர் வடிகாலுக்கு வேலி, இரும்பு கதவு அமைத்து, பூட்டு போடப்பட்ட சம்பவம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, மழை நீர் வடிகாலை மீட்டெடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!