கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்டான்லிகுமார், 49. ஆலங்குளம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில், 'பிலிவர்ஸ் சர்ச்' என்ற கிறிஸ்துவ சபையை நடத்தி வருகிறார். ஸ்டான்லிகுமாருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
இவர் பாதிரியாராக உள்ள சர்ச்சில், வழிபாட்டுக்கு வரும் பெண்களின் மொபைல் போன் எண்களை வாங்கி வைத்து, இரவில் ஆபாசமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஆலங்குளம் பெத்தநாடார்பட்டியைச் சேர்ந்த, 52 வயது பெண், ஆலங்குளம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது:
நாங்கள், 10 ஆண்டுகளாக இந்த சர்ச்சின் விசுவாசியாக உள்ளோம். 30 வயதாகும் என் மூத்த மகள் விருதுநகரில் திருமணமாகி கணவருடன் வசிக்கிறார். அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. எனவே ஜெபிப்பதற்காக சர்ச்சில் விட்டோம்.
மூன்று நாட்கள் அங்கு தங்கும்படி பாதிரியார் கூறினார். ஜெபிப்பதாக கூறி அவளது வயிற்றை தடவி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அவளிடம் ஆபாசமாக பேசி மூளைச் சலவை செய்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இது குறித்து, என் இளைய மகள் அவரிடம் போன் செய்து கேட்டபோது, 'இது வெளியே தெரிந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன். என்னை மன்னித்து விடுங்கள்' என கூறினார்.
அருணாப்பேரியைச் சேர்ந்த ஒரு பெண் குளிப்பதை படம் எடுத்து வைத்து, பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.
இது போல சர்ச்சுக்கு வரும் பெண்களின் புகைப்படங்களை 'மார்பிங்' செய்து வைத்துள்ளதாக கூறி, பாலியல் இச்சைக்கு மிரட்டி வருகிறார்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
பாவூர்சத்திரம் போலீசார் நேற்று பாதிரியார் ஸ்டான்லிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!