முடங்கிய திருமழிசை துணை நகர திட்டம் 2026ல் பணிகளை முடிக்க திடீர் இலக்கு

சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், புதிய துணை நகரங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில், வீட்டுவசதி வாரியம் சார்பில் துணை நகரம் ஏற்படுத்தப்படும் என, 2006ல் தி.மு.க., ஆட்சி அமைந்த போது அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் எதிர்ப்பால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
இதன்பின், 2011ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, திருமழிசை துணை நகரம் திட்டத்தை மீண்டும் அறிவித்தார். அப்போதும் இதற்கு எதிர்ப்பு எழுந்தது.
விவசாயிகள் எதிர்ப்பு, நீதிமன்ற வழக்குகள் காரணமாக, திருமழிசை துணை நகர திட்டத்துக்கான பரப்பளவு, 311 ஏக்கரில் இருந்து, 123 ஏக்கராக குறைக்கப்பட்டது.
இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், பிரதான சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே, 2011 முதல் 2022 வரை நடந்தது.
இதற்கென தனி கோட்டம் ஏற்படுத்தப்பட்ட பிறகும், துணை நகரம் தொடர்பான பணிகள் வேகம் எடுக்காமல் முடங்கிய நிலையில் இருக்கிறது.
தலைமை செயலகத்தில் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், பங்கேற்ற வாரிய அதிகாரிகள், 'திருமழிசை துணை நகர திட்டத்தில், 18.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், 11 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இத்திட்ட பணிகள், 2026 ஜூனில் முடிவடையும்' என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிரான செயல்பாடுகள்
இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
திருமழிசையில் துணை நகரம் அமைக்கும் வீட்டுவசதி வாரிய திட்டத்திற்கு, எந்த வகையில் செலவிடப்படுகிறது என்பது புதிராக உள்ளது. இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி, தற்போது குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
மீதியுள்ள நிலங்கள், மழை நீர் தேங்கியும், புதர்களாகவும் காணப்படுகிறது. இந்த இடத்தில் புதிய மனைப்பிரிவுகள் எப்போது, எப்படி உருவாக்கப்படும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.திருமழிசை பகுதியை ஒட்டுமொத்தமாக புதிய துணை நகரமாக மேம்படுத்த, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. எனவே, வீட்டுவசதி வாரியம் இதில் இணைந்து செயல்பட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!