Advertisement

திருவள்ளூரில் 100 நாள் வேலை திட்டத்தில் காய்கறி உற்பத்தி!

ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம், ஆர்.ஜே.கண்டிகையில், 100 நாள் தொழிலாளர்கள் வாயிலாக, பழ மரங்கள் கொண்ட காட்டில் ஊடுபயிராக பயிரிட்ட காய்கறி, நேற்று முதன் முதலாக விற்பனை துவங்கியது. இயற்கை இடுபொருட்களால் வளர்ந்த காய்கறி என்பதால், அதிகளவில் மக்கள் ஆர்வத்துடன் காய்கறிகளை தோட்டத்திற்கே வந்து வாங்கிச் செல்கின்றனர்.


திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 நாள் தொழிலாளர்களை கொண்டு நீர்வரத்து கால்வாய், குட்டைகள் சீரமைத்தல், சாலைகளை விரிவாக்கம் செய்தல், கழிப்பறை கட்டுதல், மரக்கன்று கள் நடுதல், அரசு கட்டடங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளில் 100 நாள் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது 100 நாள் தொழிலாளர்களை விவசாய பணிகளிலும் ஈடுபடுத்த துவங்கியுள்ளனர்.

நீர் பாசனம்



அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் ஊராட்சியில் உள்ள பாலாபுரம், ஆர்.ஜே.கண்டிகை கிராமங்களில் நுாறு நாள் தொழிலாளர்கள் வாயிலாக காய்கறி தோட்டம் அமைக்கும் பணியில் முதன்முறையாக ஈடுபட்டுள்ளனர்.
பாலாபுரம், ஆர்.ஜே.கண்டிகை ஆகிய கிராமங்களின் வடகிழக்கில் மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் மஞ்சம் புற்கள் மட்டுமே முளைத்து வந்த இந்த மலையில், 2020ம் ஆண்டு, மார்ச் மாதத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், பழ மரக்கன்றுகள் நடப்பட்டன.

அங்கு, மா, பலா, வாழை, சப்போட்டா, சீதா, கொய்யா, நெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில், 100 நாள் வேலை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மூன்று ஆண்டுகளில் இந்த மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து தற்போது காய்க்க துவங்கியுள்ளன.
மரக்கன்றுகளுக்கு நீர் பாசனம் செய்ய, ஆழ்துளை கிணறு மற்றும் 'பைப் லைன்' உள்ளிட்ட பணிகள், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பாசனம் மற்றும் தோட்டத்தின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் தினசரி, 20 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 440 மனித சக்தி நாட்கள் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து வரும் நிலையில், இனி அந்த குறு மரங்கள் தானாகவே வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கை எழுந்துஉள்ளது.

'கெமிக்கல்' உரங்கள்



இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன், குறு மரங்களுக்கு இடையே காய்கறி செடிகள் ஊடுபயிராக நடவு செய்யப்பட்டன. கத்தரி, வெண்டை, தக்காளி, சுரைக்காய், தர்ப்பூசணி, வெண்டைக்காய் மற்றும் பூச்செடிகளும் வளர்க்கப்பட்டுள்ளன. மலையில் இயற்கையாகவே செம்மண் உள்ளதால், நடவு செய்யப்படும் அனைத்து செடிகளும் நன்கு வளர்ந்து விடுகின்றன.

இந்தபகுதி மலையாக உள்ளதால், இதுவரை இங்கு, பூச்சி மருந்து மற்றும் செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு விளையும் காய்கறிகள் மற்றும் பழ ரகங்கள் 'கெமிக்கல்' உரங்கள் இல்லாமல், இயற்கையான சத்துக்களை கொண்டுள்ளன. இயற்கை முறையில் விளையும் காய்கறி என்பதால் மக்களும் வியாபாரிகளும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இயற்கை காய்கறிகள் கிடைப்பது அரிது



ஊராட்சி மலைப் பகுதியில், ௧௦௦ நாள் தொழிலாளர்கள் வாயிலாக கால்வாயை சீரமைக்கும் போது எடுத்த மண்ணில், சுரைக்காய், பாகற்காய், கல்யாணி பூசணி விதைத்தேன். நன்கு வளர்ந்து காய்கள் அதிகளவில் வந்தன. மலைப்பகுதியில் இருந்து வீணாக தண்ணீர் செல்வதை தொழிலாளர்கள் வாயிலாக, ஆங்காங்கேபள்ளங்கள் தோண்டி பழ வகை செடிகள் வைத்தேன். பழச் செடிகள் நன்கு வளர்ந்த பின், ஊடுபயிராக கத்திரி, வெண்டை, தக்காளி போன்றவை பயிரிட்டேன்.
சொந்த செலவில், ஆழ்துளை கிணறு குழாய் அமைத்து, தண்ணீர் பிடித்தால் காய்கறி செடிகள் நன்றாக வளர்ந்து காய்கறிகள் அதிகளவில் கிடைக்கின்றன. ஊராட்சி மக்களுக்கு மானிய விலையிலும், வெளியூர் வியாபாரிகளுக்கு மார்க்கெட் விலையிலும், காய்கறி விற்கப்படுகிறது. இந்த வருவாய் ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்படும்.
- ஏ.வி.தென்னரசு, ஊராட்சி தலைவர், ஆர்.ஜே.கண்டிகை.

ஊராட்சி மக்களுக்கு மானிய விலை



காய்கறி தோட்டத்திற்கும் பல ஆண்டுகளாகரசாயன உரங்கள் அதிகளவில் போட்டு தான் காய்கறி செடிகளை வளர்கின்றனர். இதுதவிர பூச்சி மருந்தும் செடிகளுக்கு அடிப்பதால், காய்கறிகள் விஷத்தன்மையாக மாறும் அபாயம் உள்ளது. இந்நிலையில் எந்தவித ரசாயன உரங்களும் இல்லாமல் இயற்கை மண் மற்றும் செடி, மரங்களின் தழைகளால் வளரும் காய்கறிகள், உடம்புக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் என்பதால், ஆர்வத்துடன் காய்கறி வாங்கிச் செல்கிறேன். நண்பர்களுக்கும் அருகில் உள்ள கிராம மக்களுக்கும் இயற்கை காய்கறிகள் கிடைக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிப்பேன். இயற்கை காய்கறிகள் கிடைப்பது தற்போதைய காலத்தில் அரிதாகும்.
- என்.மணி, ஆர்.கே.பேட்டை ஒன்றியம்.



வாசகர் கருத்து (5)

  • basha - paris,பிரான்ஸ்

    தமிழக முழுவதும் செயல் படுத்த வேண்டும் முயற்சி செய்ய தமிழக அரசு

  • ஆரூர் ரங் -

    பசுஞ்சாணி , சிறுநீர் போன்ற வற்றை சேகரித்து இயற்கை உரம், பஞ்சகவ்வியம் போன்றவற்றை😐 தயாரிக்க சொல்லிக் கொடுக்கலாம். இது போல மரத்தடியில் உட்கார்ந்து சம்பளம் கொடுப்பது வீண். சுய தொழில் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

  • ஆரூர் ரங் -

    பசுஞ்சாணி, சிறுநீர் போன்றவற்றை சேகரித்து இயற்கை உரம், பஞ்சகவ்வியம் போன்றவற்றை😐 தயாரிக்க சொல்லிக் கொடுக்கலாம். இது போல மரத்தடியில் உட்கார்ந்து சம்பளம் கொடுப்பது வீண். சுய தொழில் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

  • Fastrack - Redmond,இந்தியா

    உற்பத்தி செலவு கிலோவுக்கு இருநூறு ரூபாயாவது ஆகும் ..அவ்வளவு கடின உழைப்பாளிகள்

  • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

    காங்கேயம் படியூர் க்கு விரிவு படுத்துங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement