Advertisement

கூவம் முகத்துவாரத்தில் தடுப்பு சுவர் பணி துவக்கம்: சென்னைக்கு இனி வெள்ள பாதிப்பு குறைவு

சென்னை: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில், மணல் குவிந்து அடைப்பு ஏற்படுவதை தடுக்க, ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச்சுவர் அமைக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதற்காக, 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால், கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்ற முடியும் என கருதப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டம் கேசாவரம் ஊரில், கல்லாறின் கிளையாறாக உருவாகிறது கூவம் ஆறு. அங்கிருந்து 72 கி.மீ., பயணித்து, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே, வங்கக்கடலில் கலக்கிறது. சென்னையில் மதுரவாயல், ரயில் நகர், கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் வழியாக இந்த ஆறு, 18 கி.மீ., துாரம் பயணிக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கும் இடத்தில் இருந்து பருத்திப்பட்டு வரை, ஆற்றில் நல்ல நீரோட்டம் உள்ளது. இதனால், வீடுகளின் தேவைகளுக்கும் விவசாயத்திற்கும் பயன்படுகிறது.
ஆனால், அதன் பின் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் கழிவு நீர், கூவத்தில் நேரடியாக கலக்கிறது. இதனால், சென்னை நகரின் கழிவு நீரை வெளியேற்றும் கட்டமைப்பாக கூவம் ஆறு மாறியுள்ளது.

கழிவு நீர் கலப்புவடகிழக்கு பருவமழை காலங்களில் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் தேங்கும் வெள்ள நீரை, கூவம் ஆறு அதிக அளவில் வெளியேற்றி வருகிறது. கூவம் ஆறு கடலில் கலக்கும் இடத்திற்கு 300 மீட்டருக்கு முன்பாக, மத்திய பகிங்ஹாம் கால்வாயும் அதனுடன் கலக்கிறது.
இதனால் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழை நீரும், கூவம் ஆற்றின் வழியாக வெளியேறி வருகிறது.

தண்ணீருடன் கழிவு நீரும் கலந்து கரைபுரண்டோடும் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில், கடல் அலைகளால் மணல் மற்றும் 'பிளாஸ்டிக்' கழிவுகள், ஆகாய தாமரை செடிகளால் அடைப்பு ஏற்படுகிறது.
இதனால், கழிவு நீர் மற்றும் மழை நீர் சீராக வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. நீர்வளத்துறை வாயிலாக ஆண்டு முழுதும் முகத்துவாரத்தில், 'பொக்லைன்' வாகனங்கள் வாயிலாக துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும், 30 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது.

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், முகத்துவாரத்தில் வெள்ள நீரை விரைந்து வெளியேற்றுவதற்கு வசதியாக, கூவம் ஆற்றின் இரண்டு புற கரைகளிலும் வெள்ள தடுப்புச் சுவர் அமைப்பதற்கு, 70 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்து, 2021ல் 'டெண்டர்' விடப்பட்டது.
இந்த நிதியில், தடுப்பு சுவர் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை, நீர்வளத்துறை துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, அங்குள்ள கடல் மணலை அகற்றி, அருகில் உள்ள கரைகளை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடைப்புஇதைத்தொடர்ந்து, பெரிய பாறை கற்கள் கொட்டப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு கான்கிரீட் போடப்பட உள்ளது. 'டெட்ரா பேட்' எனப்படும் கான்கிரீட் கற்களும், இப்பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூவம் ஆற்றின் முகத்துவாரம், வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றும் திறன் கொண்டது. மழைக்காலங்களில் அடைப்பு ஏற்படுவதால், நீர் வெளியேற்றம் குறைகிறது. இதனால், சென்னை மாநகரின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி, பாதிப்பு ஏற்படுகிறது.

இதை கருத்தில் வைத்து, முகத்துவாரத்தின் தெற்கு பகுதியில் 1,017 அடி, வடக்கு பகுதியில் 837 அடி நீளத்திற்கும், 13 அடி உயரத்திலும் தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது. இப்பணிகளை 18 மாதங்களில் முடிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
கடலுக்கு அருகே கற்களை வாகனத்தில் எடுத்து வருவதற்கு, இரவு நேரங்களில் மட்டுமே போலீசாரின் அனுமதி கிடைக்கும். இருப்பினும், முன்கூட்டியே பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கூவம் மறுசீரமைப்பு 'அம்போ!'கூவம், அடையாறு உள்ளிட்ட சென்னை நீர்வழித்தடங்களை சீரமைப்பதற்காக, சென்னை வெள்ள தடுப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், சுற்றுச்சூழல், நீர்வளம், தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உள்ளிட்டவை இணைந்து, இப்பணியை மேற்கொள்கின்றன.

கூவம் ஆற்றில் நேப்பியர் பாலம் முதல் எழும்பூர் வரை, ஆக்கிரமிப்புகளை அகற்றி, இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கூவம் ஆறு அப்பகுதியில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஆனால், மற்ற இடங்களில் 'அம்போ' என விடப்பட்டுள்ளது. அவற்றில், ஆக்கிரமிப்பு குடிசைகள் மட்டுமின்றி ஹோட்டல்கள், தொழிற் சாலைகளும் உருவாகியுள்ளன. இப்பணியை முழுமையாக முடிக்காமல், அடையாறு ஆறு சீரமைப்பு பணிகளை, சென்னை வெள்ள தடுப்பு அறக்கட்டளை கையில் எடுத்துள்ளது.வாசகர் கருத்து (5)

 • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

  ஏற்கனவேயே ஒருவர் கூவத்தினை கோடி கோடியாக செலவு செய்து நறுமணம் வீச செய்துவிட்டார். நாங்கள் கட்டும் தடுப்பு சுவர் மட்டும் வெல்ல நீரை தாங்கும் அளவிற்கு பலமாக கட்டுவோமா என்ன? வெள்ளம் வந்தவுடன் அடித்து சென்றவுடன் ஒரு குழு அமைத்து அதை ஆய்வு செய்வோம்.குழுவில் உள்ள துறைகள் எல்லாம் மலை முழுங்கி அரசு துறைகளாகும். அங்குள்ள அதிகாரிகள் பங்கு போட்டபிறகு வரும் தொகையில், வடிவேலு காமெடிபோன்று கட்டாயம் ஒரு படித்துறை மட்டுமே கட்டமுடியும். இந்த பணியை எளிதில் முடிக்க எந்த அரசியல்வாதியும் விடமாட்டார்கள், பார்த்துக்கொண்டேயிருங்கள்.

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  இந்த வேலை யானைக்கு கோமணம் கட்டினால்போலத்தான் இருக்கும். முழுக்க முழக்க பணத்தை தாண்ணீரில் கொட்டுகிறார்கள் நடக்கப்போவது ஒன்றுமே இல்லை வீண்

 • Pandian - Boston,யூ.எஸ்.ஏ

  கரையோரம் பூங்கா அமைத்து நடைபயிற்ச்சி பாதைகள் அமைத்தல் , ரோடு போடுதல் அக்கிரமிப்பு இல்லாமல் செய்யலாம்

 • ஆரூர் ரங் -

  துறைமுகத்தில் மண் வாரி இயந்திரங்கள் வேலை செய்யும் வரை முகத்துவாரவங்களில் மண் சேரவே செய்யும். மெரீனா கடற்கரை அப்படி உருவானதுதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement