இந்த கட்டடங்கள் பழுதடைந்ததால், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 2014ம் ஆண்டு, 44 கோடி ரூபாய் செலவில், 1 முதல் 10 'பிளாக்'குகளில், 464 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது.
கடந்த 2015 ஜூலையில் பணிகள் துவங்கி, 2016ம் ஆண்டு டிசம்பரில் முடிவடைந்தன. இதையடுத்து, 2018 பிப்ரவரியில், பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்பட்டன.
இதில், தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவிலுள்ள, சேனியம்மன் கோவில் ஆர்ச் அருகே, 9வது 'பிளாக்' கட்டடம் உள்ளது.
நான்கு மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில், 16 குடியிருப்புகளில், 90க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
சமீப காலமாக, இந்த சாலையில் தண்ணீர் லாரிகள், பால் வண்டிகள், 'ரப்பீஸ்' எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் செல்லும் போது, 9வது பிளாக் கட்டடம் ஆடுவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து அங்கு குடியிருப்போர் கூறிய தாவது:
துாங்கும் போது, கட்டடம் ஆட்டம் கொடுப்பதை அதிகமாக உணர முடிகிறது. சிலர் உயிர் பயத்தால், வேறு பகுதியிலுள்ள உறவினர்களின் வீடுகளில் இரவு தங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தண்டையார்பேட்டை காவல் நிலையத்திலிருந்து நேர் வழியில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பேருந்து, லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வந்தன. தண்டையார்பேட்டை 'மெட்ரோ' ரயில் பணிக்காக, இந்த தெரு வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்த பிறகும், இந்த தெரு வழியாக, தற்போதும் கனரக வாகனங்கள் செல்வது தொடர்ந்து வருகிறது. எனவே, கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'வீடுகள் ஆடுவது குறித்து, இதுவரை எந்த புகாரும் வரவில்லை. விரைவில் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!