விழித்திரை பாதிப்பால் பார்வை இழப்பு ஏற்படும்
சென்னை அகர்வால்ஸ் மருத்துவ குழுமம் சார்பில், 'ரெட்டிகான்' எனும் விழித்திரை சிகிச்சைகள் தொடர்பான சர்வதேச மருத்துவ கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. மத்திய சென்னை எம்.பி., தயாநிதி துவங்கி வைத்தார்.
பல்வேறு நாடுகளில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களும், துறைசார் வல்லுனர்களும் பங்கேற்றனர்.
விழித்திரை சிகிச்சைகளில் உள்ள அதி நவீன தொழில்நுட்பங்கள், புதிய முறைகள், மருந்துகளின் மேம்பாடு ஆகியவை குறித்து, கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், டாக்டர் அமர் அகர்வால் பேசியதாவது:
கேமராவில் உள்ள படச்சுருள் போல, கண்களுக்குள் விழித்திரை அமைந்துள்ளது. நாள்பட்ட சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், வயது மூப்பு காரணமாக விழித்திரையில் ரத்த கசிவு, வீக்கம், துளை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அதை முறையாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
முன்பு இத்தகைய பாதிப்புகளை கண்டறிய, நரம்பு வழியே 'டை' செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படும். தற்போது 'ஓசிடி -- ஆஞ்சியோ' முறை, நவீன 'ஸ்கேன்' வசதிகள் வாயிலாக கண்டறியலாம்.
அதேபோல கண் சிகிச்சைகளுக்கு பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அவற்றை பரஸ்பரம் பரிமாறி கொள்ளவே, இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
கண்புரை, விழித்திரை நோய்களால் பார்வையிழப்பு நேரிடுவது அதிகமாக உள்ளது. ஆனால், அவற்றை தடுப்பதற்கான செயல்திட்டங்களும், விழிப்புணர்வும் மிக குறைவாக உள்ளது.
இந்த பிரச்னைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறவில்லை எனில், நிரந்தர பார்வையிழப்பு ஏற்படும். எனவே, அதுகுறித்த விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அகர்வால்ஸ் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அஸ்வின் அகர்வால், முதுநிலை கண் மருத்துவ நிபுணர் டாக்டர் சவுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!