காரிமங்கலம் அருகே இரட்டைக் கொலை
காரிமங்கலம் : காரிமங்கலம் அருகே நிலத்தகராறில் நேற்று நடந்த இரட்டை கொலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஜொல்லம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல், 70; இவரது மைத்துனர் மணி, 65. பூர்விக நிலம் தொடர்பாக இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு வீட்டில் இருந்து, 17 வயது பேத்தியை கல்லுாரிக்கு, 'மொபட்'டில் மணி அழைத்துச் சென்றார்.
அப்போது, வழியில் அரிவாளுடன் வந்த தங்கவேல், திடீரென மணியை சரமாரியாக வெட்டிக் கொன்றார். தொடர்ந்து, மணியின் வீட்டில் உள்ளவர்களையும் கொலை செய்ய சென்றார்.
இதுகுறித்து அறித்த மணியின் மகன் சேட்டு, 45, டிராக்டரில் வேகமாக வீட்டிற்கு வந்தார். அவரையும் தங்கவேல் வெட்டினார். சேட்டு காலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சேட்டு, தான் ஓட்டி வந்த டிராக்டரை, தங்கவேல் மீது மோதச்செய்து அவரைக் கொன்றார்.
காலில் வெட்டு காயமடைந்த சேட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இரட்டை கொலை குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!