தேர்தலை எதிர்கொள்ள என்.ஆர்.காங்., கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த நடவடிக்கை
புதுச்சேரி, : தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் என்.ஆர்.காங்., கட்சியை அமைப்பு ரீதியாக வலுப் படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கட்சியின் தலைவர் முதல்வர் ரங்கசாமி பேசினார்.
என்.ஆர்.காங்.,கட்சியின் 13ம் ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
என்.ஆர்.காங்.,- பா.ஜ.,அரசு சிறந்த முறையில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதை அனைவரும் நன்கு அறிவீர்கள். மாணவர்கள், ஏழை மக்கள், மீனவர்கள், நெசவாளர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது.
தற்போது முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கினோம். மேலும் இந்தாண்டு முதல் சைக்கிள், லேப் டாப் வழங்கப்படும். சீருடையும் விரைவில் வழங்கப்படும். வரும் சட்டசபை கூட்டத் தொடருக்கு முன் இவை அனைத்து வழங்கப்படும்.
மாநில அந்தஸ்தை பெறுவதுதான் நமது கட்சியின் கொள்கை. அதை தற்போது வலியுறுத்தி வருகிறோம். சிலர், ரங்கசாமிக்கு பிரச்னை வரும் போது மாநில அந்தஸ்தை கையில் எடுப்பதாக கூறுகின்றனர். ரங்கசாமிக்கு எந்த சங்கடமும் கிடையாது.
மாநில அந்தஸ்தை கூறி அரசியல் செய்ய வேண்டிய நிலை இல்லை. நானே ஆட்சியில் இருக்கப்போவதில்லை.
நிர்வாக ரீதியாக ஏற்படும் பிரச்னைகள், திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆட்சியில் இருந்தவர்களுக்கு நன்றாக தெரியும். கடந்த ஆட்சியில் இருந்தவர்களும் இதை புரிந்து கொண்டுள்ளனர்.
இது ரங்கசாமிக்கு மட்டுமானதாக இல்லை. மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்காகவும், மக்களுக்குமான கோரிக்கை. இதுகுறித்து மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்றோம். தேர்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு பணியாற்ற நிர்வாக ரீதியாக மாநில அந்தஸ்து தேவை. அதற்காகவே, மாநில அந்தஸ்து கோரிக்கையை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம். அதை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. கேட்டால்தான் கிடைக்கும். அதனால் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
மாநிலத்தில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏதுவாக இருக்கும். புதுச்சேரியின் வருவாயை உயர்த்தி, மத்திய அரசின் நிதி உதவியுடன் மேலும் மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்பதே நோக்கம்.
புதுச்சேரிக்கு விற்பனை வரி, கலால் மற்றும் சில துறை மூலம் வருவாய் வருகிறது. மக்கள் மீது சுமையை ஏற்றாமல், எந்த வகையில் வருவாயை உயர்த்த முடியும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
என்.ஆர்.காங்., ஒரு சாமி கட்சி. நிச்சயம் பெரிய வளர்ச்சியை பெறும். நமது கட்சியின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது. நிர்வாகிகளை நியமித்து அமைப்பு ரீதியாக வலுப்படுத்தி தேர்தலை எதிர்கொள்ள விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!