இ.சி.ஆர்., ரயில்பாதை திட்டத்தில் முதல்கட்டமாக புதுச்சேரி - கடலுார் இடையே துவங்க கோரிக்கை
புதுச்சேரி : இ.சி.ஆர்., ரயில் திட்டத்தில் முதல்கட்டமாக புதுச்சேரி - கடலுார் ரயில்பாதை அமைக்க வேண்டும் என புதுச்சேரி ரயில் பயணிகள் சங்கம் கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் சாமி, கவர்னருக்கு அனுப்பியுள்ள மனு:
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு என்று எதுவும் நிதி ஒதுக்காவிட்டாலும், தங்களின் முயற்சியால் சென்னை-புதுச்சேரி-கடலுார் ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. புதுச்சேரி, கடலுார் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய பட்ஜெட்டில் நகரி-திண்டிவனம் ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது துவக்கத்தில் நகரி-திண்டிவனம்-புதுச்சேரி திட்டம்தான்.
இது புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்டு, திண்டிவனம்-புதுச்சேரி 38 கி.மீட்டர் புதிய ரயில்பாதை அமைந்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் புதுச்சேரி-கடலுார் வரை 21 கி.மீ., துாரத்திற்கு புதிய ரயில்பாதை அமைத்தால் தற்போது சென்னையிலிருந்து விழுப்புரம், கடலுார் வழியாக செல்லும் ரயில்களில் ஒருசில ரயில்களை திண்டிவனம்-புதுச்சேரி-கடலுார் வழியாக இயக்க வாய்ப்பாக அமையும். இதனால் சுமார் 60 கி.மீ.,பயண துாரம் குறையும். நேரமும், செலவும் குறையும்.
எனவே சென்னை-கடலுார் பாதை மீண்டும் காலதாமதமாகும் பட்சத்தில் மேற்கண்ட திட்டத்தை ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி திட்டம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால், நகரி - திண்டிவனம் - புதுச்சேரி திட்டத்தில் முதல் கட்டமாக திண்டிவனம் - புதுச்சேரி வரையிலும், சென்னை - கடலுார் இ.சி.ஆர்.,திட்டத்தின் முதற்கட்டமாக புதுச்சேரி - கடலுார் வரையிலான புதிய ரயில்பாதை மட்டும் அமைத்துவிட்டால் புதுச்சேரி சொர்க்க பூமியாகும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!