கத்திவாக்கம் தாமரை குளத்தை மீட்டெடுக்க சென்னை மாநகராட்சிக்கு தீர்ப்பாயம் உத்தரவு
'சென்னை, எண்ணுார், கத்திவாக்கத்தில் 5.32 ஏக்கர் பரப்பில் இருந்த தாமரைக்குளம், ஆக்கிரமிப்புகளால், 2 ஏக்கராக சுருங்கியுள்ளது. இந்த குளமும், குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. சுற்று வட்டாரங்களில் இருந்து கழிவு நீரும், குளத்தில் விடப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, தியாகராஜன் என்பவர், 2021-ல் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த தீர்ப்பாயம், இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி, சென்னை கலெக்டர், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தாமரைக்குளம் 5.25 ஏக்கர் பரப்பில் இருந்து, 3 ஏக்கராக சுருங்கியுள்ளதாக, சென்னை கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 1989-ல் கலெக்டர் அளித்த பரிந்துரையின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரிகிறது.
தாமரைக்குளத்தை பராமரித்து வரும் சென்னை மாநகராட்சி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சி சார்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால், வழக்கு விசாரணை பிப்., 20-க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!