சிதிலமடைந்த விமானங்களை அகற்ற சென்னை ஏர்போர்ட் பொது அறிவிப்பு
சென்னை, சென்னை விமான நிலையத்தில், பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பயன்படாத விமானங்களை அகற்றும் பணியை, சென்னை விமான நிலைய நிர்வாகம் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.
என்.இ.பி.சி., ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் ஆகிய நிறுவனங்களின், பயன்படாத 12 விமானங்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதில், என்.இ.பி.சி., விமானங்கள் நான்கும், ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்றும் 2021ல் அப்புறப்படுத்தப்பட்டன. கிங்பிஷர் நிறுவனத்திற்கு சொந்தமான ஏழு விமானங்களில், இரண்டு விமானங்கள் 2022 துவக்கத்தில் அப்புறப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, நான்கு விமானங்களை அப்புறப்படுத்தும் பணியும், அதன் மதிப்புகளை கணக்கிடுவதற்கான பணிகளும் 2022 செப்டம்பரில் துவங்கியது.
இந்த விமானங்களை அப்புறப்படுத்துவதன் வாயிலாக, 2012 முதல், தற்போது வரையிலான விமான நிறுத்தக் கட்டணம், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படும்.
இதனால், சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். தவிர, இதர விமானங்களை நிறுத்துவற்கான கூடுதல் இட வசதியும் கிடைக்கும்.
இந்த நிலையில், சிதிலமடைந்த மூன்று விமானங்களை அகற்றவும், அதற்கான நிலுவைத் தொகைகளை செலுத்தவும், சம்பந்தப்பட்ட விமான நிறுவன உரிமையாளர்களுக்கு, பொது அறிவிப்பு வாயிலாக, சென்னை விமான நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு, வரும் 10ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட நிறுவனம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
இல்லையெனில், இந்திய விமான நிலையங்களின் ஆணைய சட்டப்படி, சிதிலமடைந்த மூன்று விமானங்கள் அப்புறப்படுத்தப்படும்.
இவ்வாறு விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!