அண்ணா நகரின் மையப்பகுதியில், 15.5 ஏக்கர் பரப்பில், டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா பரந்து விரிந்துள்ளது.
மரங்கள், குளம், பச்சை பசேலென செடிகள், புல் தரைகள், கலையரங்கம், ஸ்கேட்டிங் மையம், விளையாட்டு உபகரணங்கள் என, சென்னை மாநகராட்சி ஆதரவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்கா, அண்ணா நகருக்கு மட்டுமல்லாமல், சென்னை வாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் விளங்கி வருகிறது. இங்குள்ள 'டவர்' என்படும் கோபுரம், 138 அடி உயரம் மற்றும் 137 அடி அகலம் உடையது.
கடந்த, 1968ல், கோபுர பூங்கா துவங்கியது முதல், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில், இந்த கோபுரத்தின் வாயிலாக, மத்திய சென்னையை முழுமையாக பார்க்க முடிந்தது. தற்போது, உயர் கட்டடங்கள் அதிகரித்துவிட்டதால், அவ்வாறு காண இயலாது.
கோபுரத்தின் மீது ஏறி காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்ததால், கோபுரத்தின் மேல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, 10 ஆண்டுகளாக மூடப்பட்டது.
பொதுமக்களின தொடர் கோரிக்கையை அடுத்து, கோபுரத்தில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டது.
இதற்காக, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஓராண்டுக்கு மேல் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, கோபுர டவரில், 13 தளங்களிலும் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. மேலும் சில பணிகள் நடந்து, இறுதிக்கட்டடத்தை எட்டியுள்ளது.
இம்மாத இறுதிக்குள், பொதுமக்கள் பார்வைக்காக டவர் திறக்க, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
பல ஆண்டுகளாக, திறப்புக்கு தயார்... திறப்புக்கு தயார்... என சொல்லி கொண்டே இருப்பதால், எப்போது தான் திறக்க போறீங்க என, பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.அதே சமயம், டவரில் ஏறி பார்வையிட ஒருவருக்கு 50 ரூபாய் வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!