Advertisement

விடுபட்ட மழை நீர் வடிகால் பணிகளை துவங்க... உத்தரவு! பருவமழைக்கு தயாராக தலைமை செயலர் அறிவுரை

ADVERTISEMENT
திருப்புகழ் கமிட்டி பரிந்துரையை ஏற்று, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு அனைத்து துறைகளும் தயாராகும்படி, தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, துார் வாரும் பணிகளை 15 நாட்களுக்குள் துவங்குவதுடன், முடிக்கப்படாத கால்வாய் பணிகளையும் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

சென்னையில் 2021ல் பெய்த மழையின்போது பெரும்பாலான இடங்கள், வெள்ளக்காடாக மாறின. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதே நிலைமை மீண்டும் தொடராமல் இருக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருபுகழ் தலைமையில் மேலாண்மை குழுவை அரசு அமைத்தது.

அந்த குழுவினர், மூன்று கட்டங்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

அதன்படி, 'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின் பகுதி 1, பகுதி 2ன் கீழ், 254.65 கோடி ரூபாய் மதிப்பில் 60.79 கி.மீ., நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள், 2022ல் துவக்கப்பட்டன.

அதுமட்டுமல்லாமல், வெள்ள நிவாரண நிதியின் கீழ் 291.36 கோடி ரூபாய் செலவில் 107.56 கி.மீ., நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 26.28 கோடி ரூபாய் செலவில் 9.80 கி.மீ., நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் 26.28 கோடி ரூபாய் மதிப்பில் 2 கி.மீ., நீளத்திற்கும் பணிகள் துவக்கப்பட்டன.

மேலும், விடுபட்ட இடங்களில், உலக வங்கி நிதி உதவியின் கீழ் 119.93 கோடி ரூபாய் செலவில் 45 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால் பணிகளும், 144 இணைப்புகளும் கொடுக்கப்பட்டன.

இதைத்தவிர, கொசஸ்தலை ஒருங்கிணைந்த வடிகால் திட்டத்தின் கீழ் 3,220 கோடி ரூபாய் செலவில் 769 கி.மீ., நீளத்திற்கும், கோவளம் வடிகால் திட்டத்தின் கீழ் 150.47 கோடி ரூபாய் செலவில் 39 கி.மீ., நீளத்திற்கும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வந்தன.

கடந்த மழைக்காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கருத்தில் வைத்து, முன்னுரிமை ஒன்று, இரண்டு என்ற அடிப்படையில் பிரித்து, பணிகள் நடந்து வந்தன.

இதில், முன்னுரிமை ஒன்றில் துவக்கப்பட்ட பணிகள் 90 சதவீதம், கடந்த 2022 வடகிழக்கு பருவமழைக்கு முன் முடிக்கப்பட்டது. மீதமுள்ள பணிகளும், மழையின்போது மேற்கொள்ளப்பட்டதால், கடந்தாண்டு பருவமழையால் பெரியளவில் மக்கள் பாதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், எதிர்வரும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு தயாராவது குறித்து, தலைமை செயலர் இறையன்பு தலைமையில், திருப்புகழ் கமிட்டி மற்றும் மாநகராட்சி, நீர்வளம் என அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த கூட்டத்தில், கடந்தாண்டு மழைநீர் தேங்கிய விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை பகுதிகள் மற்றும் கொளத்துார், பட்டளம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, திருப்புகழ் கமிட்டி, சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை



இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:

பருவமழைக்கு முன்னதாகவே துார் வாரும் பணிகளை துவக்க வேண்டும். மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் மழை நீர் வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

சென்னையில் உள்ள பிரதான நீர்நிலைகளான கூவம், அடையாறு, பகிங்ஹாம் ஆகியவற்றுடன், 54 கிளை கால்வாய்களையும் துார்வாரி பராமரிக்க வேண்டும். இதற்கான நிதி பெற்று பணிகளை உடனடியாக மேற்கொள்ள, திருப்புகழ் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இதையேற்று தலைமை செயலர் இறையன்பு, சென்னையில் உள்ள மழை நீர் வடிகால்களை, 15 நாட்களுக்குள் துார்வார உத்தரவிட்டுள்ளார். மேலும், மழையால் நிறுத்தப்பட்டுள்ள பணிகளை உடனடியாக துவங்க, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டார்.

பணிகள் நடைபெறும்போது, உரிய பாதுகாப்புடன் நடைபெற வேண்டும்.

குறிப்பாக, பள்ளி அருகே பணிகள் நடைபெறும்போது, இரும்பு தடுப்புகள் அமைத்தல், மழை நீர் வடிகால்களுக்கான பள்ளங்களை அமைக்கும்போது மரங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ளுதல், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல், பணிகளை மேற்கொள்ளவும் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் தீவிரம்

சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை, வெள்ள நிவாரண நிதி, உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதி, உலக வங்கி நிதியின் வாயிலாக, தற்போது 27 கி.மீ., துாரத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளை தொடர்ந்து மற்ற இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த பணிகளை துவக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.அதேபோல, தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் 15 நாட்களுக்குள் துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக, நிதி ஒதுக்கீடு குறித்த விரிவான திட்டம் தயாரிக்கும் பணியிலும், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவை, ஓரிரு நாட்களில் முடிந்து, ஒப்பந்த அடிப்படையில் துார் வாரும் பணிகள் துவங்கப்படும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement