அரசு பஸ் டிரைவரை தாக்கிய ராணுவ வீரர்கள்
வேலுார் மாவட்டத்திலிருந்து ராணுவ போர் தளவாடங்களை ஏற்றிய இரு கனரக வாகனங்கள் நேற்று பெங்களூரு சென்றது. பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை ராணுவத்தினர் நான்கு வாகனங்களில் பின் தொடர்ந்தனர்.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சோமநாதபுரம் அருகே, 12:30 மணியளவில், ஓசூர் செல்லும் அரசு பஸ், ராணுவ வாகனங்களை முந்தி செல்ல முயன்றது. வழிகேட்டு டிரைவர் தமிழரசு தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.
இதனால் ராணுவ வாகனங்களை நிறுத்திய துணை ராணுவத்தினர், அரசு பஸ்சில் ஏறி டிரைவரிடம், 'மேடான பகுதி என்பதால், மெதுவாக செல்கிறோம், அதற்குள் எத்தனை முறை ஹாரன் அடிப்பாய்' எனக்கூறி, லத்தியால் தாக்கினார். இதில் அவர் காயமடைந்தார். ஆத்திரமடைந்த தமிழரசு, பஸ்சை ராணுவ வாகனங்களுக்கு முன் சாலையின் குறுக்கே நிறுத்தினார். பயணிகளும், டிரைவரை எவ்வாறு அடிக்கலாம் என, துணை ராணுவத்தினரிடம் கேட்டனர். இதனால் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை காட்டி, பயணிகள் மற்றும் மக்களை கலைந்து செல்ல கூறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த மக்கள், அவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து கிருஷ்ணகிரி எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் குருபரப்பள்ளி போலீசார் சென்றனர். துணை ராணுவத்தினர், அரசு பஸ் டிரைவர் மற்றும் மக்களை சமாதானப்படுத்தினர்.
மக்களிடம் துப்பாக்கியை காட்டியதற்காக, மத்திய தொழில் பாதுகாப்பு ராணுவ உதவி ஆய்வாளர் பிரதாப் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து ராணுவ தளவாடங்கள் ஏற்றி வந்த வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மக்களும் கலைந்து சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!