இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க., போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் செயல்வீரர்கள் கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. அமைச்சர் நேரு தலைமை வகித்தார்.
இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசியதாவது:
கடந்த, 2016ம் ஆண்டு வரை அருந்ததியர் ஓட்டுகளில், 85 சதவீதம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாகவே இருந்தது. அவர்கள்,
எம்.ஜி.ஆரை, தங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்து வந்தனர். ஆனால், 2016க்கு பின் நடந்த இரு தேர்தலிலும் இந்த சமுதாய மக்களின் ஓட்டுகளில், 85 சதவீதம் தி.மு.க.,வுக்கு பதிவாகி உள்ளன. இந்த தேர்தலில், 100 சதவீதமும், தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில்தான், அருந்ததியர் சமூக மக்களுக்கு, 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இவற்றை விளக்கி அவர்களிடம் தெரிவித்து ஓட்டு சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:
அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால், யாரையும் தட்டிவிட்டு வெற்றி கோட்டை அடைய விரும்பவில்லை.
சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு அரச்சலுார் அருகே மணிமண்டபம் கட்ட, 41 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சமுதாய கூடமும் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பரசன், தங்கம் தென்னரசு, மெய்யநாதன், நாசர், சி.வி.கணேசன், மதிவேந்தன், ரகுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!