Advertisement

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு



'ஏழை பெண்களுக்கு உதவும் இலவச பஸ் பயண திட்டம்'

''இலவச பேருந்து பயண திட்டம் மூலம் இதுவரை, 233 கோடியே, 71 லட்சம் முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தில் நேற்று ஈடுபட்ட அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை விளக்கி ஓட்டு சேகரிக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகளில், 85 சதவீத வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார்.
குறிப்பாக பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டம், புதுமை பெண் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
இலவச பஸ் பயண திட்டத்தில் இதுவரை, 233 கோடியே, 71 லட்சம் முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். தினமும், 40 லட்சம் பெண்கள் வரை பயணிக்கின்றனர். இந்த திட்டம் ஏழை பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

'எந்த சின்னம் எதிர்த்தாலும் டெபாசிட் காலி'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்., வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க., அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை கூறி ஓட்டு சேகரிக்கிறோம். காங்., வேட்பாளர் இளங்கோவனை எதிர்த்து போட்டியிடுபவர் எந்த சின்னத்தில் நிறுத்தப்பட்டாலும், அவர்களால் டெபாசிட் கூட பெற முடியாத அளவுக்கு வெற்றியை பெற முடியும். இந்த இடைத்தேர்தலின் வெற்றி, வரும் பார்லிமென்ட் தேர்தலிலும் எதிரொலிக்கும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.


டவுன் பஸ் மோதி வாட்ச்மேன் பலிபவானிசாகர் அருகே, டவுன் பஸ் மோதியதில், வாட்ச்மேன் பலியானார்.
பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையம், தேவாங்கபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 60; இக்கரை தத்தப்பள்ளியில் ஒரு காகித தொழிற்சாலையில் வாட்ச்மேனாக பணிபுரிந்தார். நேற்று அதிகாலை வேலைக்கு எக்ஸெல் சூப்பர் மொபட்டில் சென்றார். வெள்ளியம்பாளையம் பவர் ஹவுஸ் அருகே, வலது புறம் இணைப்பு சாலையில் திரும்ப முயன்றபோது, அரசு டவுன் பஸ் மோதியதில், துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் சிறையிலடைப்புஈரோடு மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தாளவாடி பகுதியில் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு காரில், 630 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வாகனத்தை ஓட்டிச் சென்றது தாளவாடி, திப்பு சர்க்கிளை சேர்ந்த சமியுல்லா, 37, என்பது தெரியவந்தது.
ரேஷன் அரிசியை மக்களிடம் வாங்கி, கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் அதிக விலைக்கு விற்க எடுத்து சென்றது தெரியவந்தது, அவரை கைது செய்து, காருடன் அரிசியை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

வாய்க்காலில் குளித்த பெயின்டர் மாயம்
கொடிவேரி அருகே வாய்க்காலில் குளித்த, கோவையை சேர்ந்த பெயின்டர் மாயமானார்.
கோவை மாவட்டம் போத்தனுார் அருகே, காந்தி நகர், மேட்டு தோட்டத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் பிரேம்குமார், 40; இவரின் மனைவி ரீனா. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். லாரன்ஸ் பிரேம்குமார் கோவையில் கார்பெண்டர் வேலை செய்து வந்தார். சத்தியமங்கலம், வடக்குபேட்டையில் உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்தார். இந்நிலையில் உறவினர் குடும்பத்தினருடன் சேர்ந்து, கொடிவேரி அணைக்கு நேற்று மதியம் சென்றார்.
அணைப்பகுதியில் குளித்து விட்டு, அரக்கன் கோட்டை வாய்க்கால் பகுதியில், லாரன்ஸ் பிரேம்குமார் குடும்பத்துடன் மீன் சாப்பிட்டார். பிறகு அரக்கன்கோட்டை வாய்க்காலில் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பாததால் குடும்பத்தார், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து தேடினர். ஆனாலும், கிடைக்கவில்லை. பங்களாப்புதுார் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.


காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர், தாராபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பூர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமை வகித்தார்.
மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக அதானி நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியதாக கூறியும், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களை காப்பாற்ற கோரியும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., காளிமுத்து உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கருத்து கேட்பு கூட்டத்தை எதிர்த்து மக்கள் முறையீடுடி.என்.,பாளையத்தை சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் சிலர், கோபி ஆர்.டி.ஓ., திவ்யபிரியதர்ஷினியிடம் நேற்று மனு கொடுத்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: டி.என்.,பாளையத்தில், அனுமதியின்றி இயங்கும் கல்குவாரி மற்றும் கிரசர் குறித்து, டி.என்.பாளையத்தில் நாளை (இன்று) கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. எந்த அதிகாரிகளும், ஆய்வு நடத்தாமல் கூட்டம் நடத்தவுள்ளனர்.
கருத்து கேட்பு கூட்டத்துக்கான, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விரிவான அறிக்கை, மாசுகட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்களும் அறியும் வகையில் அறிவிப்பு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.
கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரிதர்ஷினி கூறுகையில், 'கருத்து கேட்பு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். அதில் உங்கள் தரப்பில் தெரிவிக்கப்படும் ஆட்சேபனை விபரங்களை, மினிட் புத்தகத்தில் பதிவு செய்யப்படும்' என்றார். அதன்பின் மக்கள் திரும்பி சென்றனர்.
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தாராபுரம், பிப். 7-
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், தாராபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றிய தலைவர் வித்யாலட்சுமி தலைமை வகித்தார். சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, அகவிலைப்படியுடன், 6,750 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

லீவு நாளில் மது விற்ற
30 பேர் மீது வழக்கு
ஈரோடு, பிப். 7-
டாஸ்மாக் கடை விடுமுறை நாளில் மது விற்றதாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வள்ளலார் அவதரித்த தினமான நேற்று முன்தினம், ஈரோடு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், 12 வழக்குகளை பதிவு செய்தனர். இதேபோல் சட்டம் ஒழுங்கு போலீசார் 18, வழக்குகளை பதிவு செய்தனர். மொத்தம், 550 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சிவன்மலை கோவில்
தேர் திருவிழாவில்
எலக்ட்ரீஷியன் பலி
காங்கேயம், பிப். 7-
சிவன்மலை கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழாவில், மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலியானார்.
காங்கேயத்தை அடுத்த சிவன்மலையில், சுப்ரமணியசுவாமி கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஒரு வாரமாக பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. சிவன்மலை அடிவார பகுதியில் பல்வேறு கடைகள் மற்றும் தெரு பகுதிகளில் மின் விளக்குகளுக்கான ஒயர் செல்கிறது.
காங்கேயம் அருகே படியூரை சேர்ந்த மைக் செட், லைட் அமைத்து தரும் நிறுவனத்தில் வேலை செய்பவர் பழனிச்சாமி, 47; சிவன்மலை அடிவாரப் பகுதியில் நேற்று மதியம் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இரட்டை குழந்தைகளின் தாயார் விபரீதம்
அந்தியூர், பிப். 7-
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த பெரிய வடகம்பட்டியை சேர்ந்தவர் கலைவாணி, 35; இவரின் கணவர் செல்வராஜ், 35; இவர், சேலம் ரயில்வே துறையில், ஆப்பரேட்டிங் டிபார்ட்மெண்டில், வேலை செய்கிறார். எட்டு மாதத்தில், ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
சில நாட்களாக கிருஷ்ணவேணி உடல் நிலை பாதிக்கப்பட்டது. மேலும், இரண்டு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று அடிக்கடி இவரது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூரில் உள்ள அவரது அண்ணன் வீட்டில், மனைவியை செல்வராஜ் தங்க வைத்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாதபோது, கலைவாணி துாக்கிட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிந்தது. அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

பெட்டிக்கடையில்
திருடியவர் கைது
கோபி, பிப். 7-
கோபி அருகே பெட்டிக்கடையில், கைவரிசை காட்டிய நபரை, கடத்துார் போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகே கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் முருகன், 38, எலக்ட்ரீசியன்; இவரின் பெற்றோர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளனர். பெட்டிக்கடைக்குள் இருந்து நேற்று முன்தினம் மதியம் வெளியேறிய ஆசாமியை, வடிவேல் முருகன் மடக்கினார். அவரிடம் ஒரு கிலோ காப்பர் ஒயர், பத்து சிகரெட் பாக்கெட், 300 ரூபாய் இருந்தது. கடையில் திருடிச் சென்றது தெரிய வந்தது. கடத்துார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், கோபியை சேர்ந்த மஞ்சுநாதன், 38, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பச்சமலை முருகன் கோவிலில்
திருக்கல்யாணம் கோலாகலம்
கோபி, பிப். 7-
பச்சமலை முருகன் கோவிலில், திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோபி அருகே பச்சமலை முருகன் கோவிலில், தைப்பூசத்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரண்டாம் நாளான நேற்று காலை, 5:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதையடுத்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் கோபி, புதுப்பாளையம், பச்சமலை சாலை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஊ.வ.துறை அலுவலர்கள் நம்பியூரில் ஆர்ப்பாட்டம்
நம்பியூர், பிப். 7-
நம்பியூர் வட்டார தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு, மத்திய பட்ஜெட்டில் நிதி குறைப்பை கண்டித்து, மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நம்பியூர் வட்டார தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சங்க செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
இதேபோல் நம்பியூர் வட்டார, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமையில் ஒன்றிய செயலாளர் பூங்கோதை, பொருளாளர் அம்பிகாபதி, துணைத்தலைவர்கள் ராஜேஸ்வரி, சுப்புலட்சுமி, சத்தியகலா, நிர்வாகி முருகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
பவானிசாகர், பிப். 7-
பவானிசாகர் யூனியனில், 15 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்குள்ள கிராமப்பகுதிகளில் நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த திட்டத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி, ஒவ்வொரு ஆண்டிலும் குறைக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை, 11:30 மணியளவில், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பவானிசாகர் யூனியன் அலுவலகம் முன், சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது ஏழு வாரமாக ஊதியம் வழங்கவில்லை. நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
* நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு, இரண்டு மாதமாக கூலி வழங்கவில்லை என்று கூறி, சத்தியமங்கலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில், தொழிற் சங்க தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement