நிலை சேர்ந்த சென்னிமலை முருகன் கோவில் தேர்: நாளை மறுதினம் நடக்கிறது மகா தரிசனம்
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலமாக திகழும், சென்னிமலையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தைப்பூச விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மொத்தம், 15 நாட்கள் நடக்கும் விழாவில் கரூர், திருப்பூர், கோவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் குடும்பம், குடும்பமாக பல்வேறு வகையிலான காவடி சுமந்து வருவர். மேளதாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து, மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.
இதன்படி நடப்பாண்டு தைப்பூச விழா கடந்த மாதம், 28ம் தேதி தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளினார். முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று முன்தினம் காலை தொடங்கி, நகரில் நான்கு ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்தது. நேற்று மாலை, 5:45 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. இன்று இரவு பரிவேட்டை, குதிரை வாகன காட்சி நடக்கிறது. நாளை இரவு தெப்போற்சவம், பூதவாகன காட்சி நடக்கிறது.
நாளை மறுதினம் மகாதரிசன நிகழ்வு நடக்கிறது. இதையொட்டி அன்று காலை, 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு, சிறப்பு மகா அபிஷேகம் நடக்கிறது.
அதை தொடர்ந்து இரவு, 7:40 மணிக்கு நடராஜ பெருமான், சுப்பிரமணிய சுவாமி முறையே, வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா காட்சி, இரவு முழுவதும் நடக்கும். இதைக்காண சென்னிமலை நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். வெள்ளிக்கிழமை அதிகாலை வரை திருவீதியுலா நடக்கும். அன்றிரவு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!