மாவட்டத்தில் களை கட்டிய தைப்பூச வழிபாடு: முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஈரோடு: ஈரோடு மாவட்ட முருகன் கோவிலில்கள், தைப்பூச விழா களை கட்டியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்
பெருமானை வழிபட்டனர்.
தைப்பூச விழாவையொட்டி, திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து வேலாயுத சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. வேலாயுதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வள்ளி, தெய்வானை சமேத வேலாயுதசுவாமி உற்சவ சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பெண்கள் பலர் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்கள் பலர் காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
* கோபி பச்சமலை முருகன் கோவிலில் அதிகாலை, 5:00 மணிக்கு, மகன்யாச அபிஷேகம், 7:00 மணிக்கு திருப்படி திருவிழா நடந்தது. பின், ௮:00 மணிக்கு காவடி அபிஷேகம், 8:30 மணிக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், பால்குட அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. மலை அடிவாரத்தில் இருந்து கிரிவலப்பாதை வழியாக திருத்தேர் வலம் வந்தது. இதேபோல் காசிபாளையம் முருகன் கோவிலுக்கு திரளான பக்தர்கள், தீர்த்தக்குடம் மற்றும் காவடியுடன் ஊர்வலமாக சென்று தரிசனம் செய்தனர்.
*அந்தியூர் தேர்வீதி சுப்பிரமணியர் கோவிலுக்கு, பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து ஏராளமனோர் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதை தொடர்ந்து பாலாபிஷேகம் நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் சுப்பிர
மணியர் அருள்பாலித்தார்.
* பவானி, கூடுதுறை, சங்கமேஸ்வரர் க்கோவில் வளாகத்தில் உள்ள பழநியாண்டவர் கோவிலில், திருக்கல்யாணம் உற்சவத்தை தொடர்ந்து, திருத்தேர் திருவீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து பூக்கடை வீதி, மேட்டூர் சாலை வழியாக சென்று தேர்வீதி, பாலக்கரை, காவேரி வீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தனர்.
* சத்தியமங்கலம் அருகே கொமாராபாளையம், தவளகிரி தண்டாயுதபாணி கோவிலுக்கு, காலை முதலே திரளான பக்தர்கள் வரத் தொடங்கினர். சுவாமிக்கு சிறப்பு பூஜை, பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
* புன்செய்புளியம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையத்தில், பொன்மலை ஆண்டவர் கோவிலில், வள்ளி-தெய்வானை உடனமர் முருகப்பெருமான் திருத்தேருக்கு எழுந்தருளிய நிலையில், நேற்று மதியம், 1:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. முதலில் சிறிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அந்த தேர் நிலை சேர்ந்தவுடன் பெரிய தேர் இழுக்கப்பட்டது. தேர்களில், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் மற்றும் விநாயகர், ஈஸ்வரி எழுந்தருளினர். கொண்டையம்பாளையத்தில் நான்கு ரத வீதிகளிலும் தேர் சென்றது.
* நம்பியூர் அருகே மலையப்பாளையம், உதயகிரி முத்து வேலாயுதசுவாமி கோவிலுக்கு, காலை முதலே திரளான பக்தர்கள் சென்றனர். வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். நுாற்றுக்கணக்கன பக்தர்கள் காவடி, பால் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதேபோல் நம்பியூர் பகுதியில் நாகமலை, திட்டமலை முருகன் கோவில்களில் தைப்பூச விழா, உற்சாகமாக நடந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!