Advertisement

காலிங்கராயன் கால்வாயில் கலக்கும் சாய கழிவுநீர்: தீர்வை எதிர்நோக்கும் கிழக்கு தொகுதி மக்கள்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி, 15வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாய தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீர், காவிரி ஆறு, காலிங்கராயன் கால்வாயில் கலக்குவதால், மக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி, 15வது வார்டுக்கு உட்பட்ட பி.பெ.அக்ரஹாரம், பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட சாய ஆலைகள், பிரிண்டிங் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தினமும் குறைந்தபட்சம், 10 ஆயிரம் மீட்டர் முதல் ஒரு லட்சம் மீட்டர் வரை துணி தயாரிக்கப்படுகிறது.

இவற்றை பிரிண்டிங் பணிக்கு உட்படுத்தும் போது, பயன்படுத்தப்படும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் கழிவுநீராக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து வினோத் என்பவர் கூறியதாவது: சில ஆலைகளில் பூஜ்ய டிஸ்சார்ஜ் கருவி இருந்தாலும், அவற்றை பயன்படுத்தாமல் நேரடியாக, சாக்கடை கால்வாய், காலிங்கராயன் கால்வாய், காவிரி ஆற்றில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. சிலர் குடிநீர் லாரி, டேங்கர் லாரிகளில் கழிவை ஏற்றி வயல்வெளி, சாலையோரம், நீர்நிலைகளில் கொட்டுகின்றனர். சாய, சலவை, பிரிண்டிங் தொழிலில் துணிகளுடன் பல வண்ணங்கள், கால்சியம் உள்பட பல வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் பல ஆயிரம் மீட்டர் சாயத் துணிகளை, காலிங்கராயன் கால்வாய், காவிரி ஆற்றில் அலசி, உலர்த்தி எடுத்து செல்கின்றனர்.
பி.பெ.அக்ரஹாரத்தை சேர்ந்த கார்த்திக் கூறியதாவது:
பி.பெ.அக்ரஹாரம், பூம்புகார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும், தோல் ஆலைகளில், தோலை சேகரித்து வைக்கும் போதும், ஒவ்வொரு தோலுக்கும் இடையே பல கிலோ உப்பு உள்ளிட்ட வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. தோலை எடுத்து செல்லும்போதும், பதப்படுத்தி மாற்றும்போதும், உப்பை உதறிவிட்டு, அலசி எடுத்து செல்வதால், ஆற்றில் உப்பு படிந்துவிடுகிறது. பதனிடும்போது அவற்றுடன் காரீயம் உள்பட பல வேதிப்பொருட்கள்களை சேர்க்கின்றனர். தோலுடன் இருந்த உப்பு போன்றவற்றை லாரிகளில் கொண்டு வந்து காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கொட்டுவது அல்லது குழி வெட்டி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் நிலத்தடி நீருடனும், நீர்நிலைகளிலும் கலக்கின்றன. தனி நபர்களின் ஆதாயத்துக்காக, பல லட்சம் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர், நிலத்தடி நீரை விஷமாக்கும் அநியாயம் நடக்கிறது.
இதுகுறித்து, 15வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஹேமலதா கூறியதாவது: சாய பட்டறைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து, இரவு நேரங்களில் கழிவு நீர் திறந்து விடுவதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர், கால்வாய்களில் கழிவு நீர் கலக்குவதை தடுத்து நிறுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு, மக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement