முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்
கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், 86ம் ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த, 30ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தைப்பூச நாளான நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி துாக்கியும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் அருகில், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஞ்ரங்கதள் அமைப்பு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. வட தமிழக அமைப்பு செயலாளர் ராமன் துவக்கி வைத்து ஆன்மிக சொற்பொழிவாற்றினார். கிருஷ்ணகிரி நகரிலிருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., தமிழரசி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், முரளி, சுமத்ரா உள்பட, 170க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சுதர்சன் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர். நேற்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பாலமுருகன் கோவில்
தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டியிலுள்ள கந்தன் பாலமுருகன் கோவிலில் நேற்று காலை, சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ராஜ அலங்காரத்தில் கந்தன் பாலமுருகன் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை விழாக்குழுவை சேர்ந்த குமார், கிருஷ்ணமூர்த்தி, காவேரி, பெருமாள் உட்பட பலர் செய்திருந்தனர்.
சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
தர்மபுரி அடுத்த குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதேபோன்று தர்மபுரி நெசவாளர் காலனி விநாயகர் வேல்முருகன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பட, பல முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
கைலாயபுரம் முருகன் கோவில்
அரூர் அடுத்த கைலாயபுரம் முருகன் கோவிலில், நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அதேபோல், அரூர் சந்தைமேடு, அச்சல்வாடி, எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை, ஒடசல்பட்டி, மொரப்பூர், கர்த்தாங்குளம், கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்களில் உள்ள, முருகன் கோவில்களில், தைப்பூச விழா விமர்சையாக நடந்தது.
பச்சைமலை முருகன் கோவில்
வேப்பனஹள்ளி அடுத்த கடவரப்பள்ளி காரக்குப்பம் பச்சைமலை முருகன் கோவிலில் நேற்று காலை, வள்ளி, தெய்வானை சமேத முருகன், ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதேபோல், வேப்பனஹள்ளி அடுத்த தீர்த்தம் பாலமுருகன் கோவில் மற்றும் எட்ரபள்ளி முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குழந்தை வடிவேலன் கோவில்
மத்துார் அடுத்த, சின்னஆலேரஹள்ளியில் குழந்தை வடிவேலன் கோவில் புனரமைக்கப்பட்டு, புதிய திருத்தேர் செய்து விழா கொண்டாடினர். நேற்று காலை கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ததுடன், மாலை 4:30 மணிக்கு குழந்தை வடிவேலன் திருத்தேர் வீதி உலா நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
காவடி எடுத்த பக்தர்கள்
பாப்பிரெட்டிப்பட்டியில் வேலவன் குன்றுவேல் முருகன் கோவிலில் நேற்று காலை அலங்கரித்த முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் பாலமுருகன் கோவில் அடிவாரத்தில், எழுந்தருளியுள்ள அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில், தை மாத பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயிலை மலையை சுற்றி மேளதாளத்துடன் கிரிவலம் சென்று
வழிபட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!