தைப்பூச திருவிழா, சென்னையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. வடபழநி ஆண்டவர் கோவில், கந்தகோட்டம், குன்றத்துார், பெசன்ட் நகர் அறுபடை வீடு உள்ளிட்ட முருகன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.
வடபழநி ஆண்டவர் கோவிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன.
இந்த நிலையில், தைப்பூச திருவிழா இரண்டாம் நாளான நேற்று விடுமுறை என்பதால், வடபழநி ஆண்டவர் கோவிலில் நேற்றும் காலை முதல் இரவு வரை, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முதியோர், கர்ப்பிணியர், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய தனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பால்காவடி பால் குடம் எடுத்து வந்த பக்தர்கள் எளிமையாக பாலாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காலை முதல் இரவு வரை, பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டன.
கோவிலில் கட்டண தரிசனத்தை நவீனமயமாக்கும் விதமாக க்யூ.ஆர் கோடு' வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், க்யூ.ஆர் கோடு' சரிவர இயங்கவில்லை.
இதனால், கட்டண தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள், பல மணி நேரம் வரிசையில் கால்கடுக்க காத்திருக்க நேர்ந்தது. அதேநேரம், இலவச தரிசனத்தில் சென்றவர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆனாலும், 2 கி.மீ., துாரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று, மூன்று மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
வரும் நாட்களில் இதேபோன்று நடக்காமல் இருக்க, 'க்யூ.ஆர் கோடு' திட்டத்திற்கு தேவையான உபகரணங்களை அதிகம் வழங்கவும், 'டிக்கெட் கவுன்டர்'களை அதிகரிக்கவும் கோரிக்கை வலுத்து உள்ளது.
மேலும், இணைய வசதி முறையாக ஏற்படுத்தும் வரை, க்யூ.ஆர் கோடு திட்டத்தை அமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்றத்துார்
குன்றத்துார் முருகன் கோவிலில் அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் நடந்தன. அதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் மொட்டை போட்டும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அதிகாலை முதலே பக்தர்களின் 'முருகனுக்கு அரோகரா...' கோஷம் விண்ணை அதிரச் செய்தது.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!