புதுச்சேரி சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தியாகராஜன் ஆகியோர் பள்ளி சீருடை அணிந்து, கழுத்தில் அடையாள அட்டையை தொங்கவிட்டு, புத்தக பையை முதுகில் மாட்டியவாறு லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து, சைக்கிளில் சட்டசபைக்கு வந்தனர்.
தொடர்ந்து, முதுகில் மாட்டிய புத்தக பையுடன் சபை அலுவல்களில் பங்கேற்று பேசினர். இதனால், சட்டசபையில் பரபரப்பு நிலவியது. பின், சட்டசபையில் இருந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்தது தொடர்பாக, எதிர்கட்சி தலைவர் சிவா அளித்த பேட்டி:
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, சைக்கிள், லேப் டாப், உதவித் தொகை வழங்கப்படவில்லை. பாட புத்தகம், நோட்டு போன்றவைகூட சரியான முறையில் தரப்படவில்லை. மாணவர்களுக்கு நல்ல உணவும் கொடுக்கவில்லை. இதை கண்டித்து தி.மு.க., வெளிநடப்பு செய்துள்ளது.
மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, கடந்த காலங்களில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தற்போது, ரங்கசாமி இதுவரை ஒருமுறை கூட தீர்மானம் போடவில்லை.
ஆனால், மாநிலத்தில் எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ, அப்போதெல்லாம் மாநில அந்தஸ்தை கையில் எடுப்பதும், அதற்காக சில அமைப்புகளை ஒன்றிணைப்பதும் சரியல்ல.
மத்தியில் என்.ஆர். காங்., கூட்டணியில் உள்ள பா.ஜ., ஆட்சி இருப்பதால், மாநில அந்தஸ்தை கேட்டு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும், அனைத்துக் கட்சி தலைவர்களையும் டில்லி அழைத்துச் சென்று வலியுறுத்த வேண்டும்.
மாநில அந்தஸ்து வேண்டும் என்று தி.மு.க., ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் ஜானகிராமன் தலைமையிலான அரசு தீர்மானம் போட்டது. அதோடு நிறுத்தவில்லை, முன்னாள் முதல்வர்கள், எம்.எல்.ஏ.,க்களை டில்லிக்கு அழைத்துச் சென்று வலியுறுத்தினர்.
மாநில வளர்ச்சிக்கு, சுதந்திரமாக செயல்பட்டு, மக்களுக்கு நல்லது செய்வதற்கு மாநில அந்தஸ்து கேட்பது நியாயம் தான். ஆனால், கேடு விளைவிக்கக் கூடிய எல்லா விஷயமும் மாநில அந்தஸ்து இல்லாமல் நடக்கிறது. மின்துறையை தனியார்மயமாக்குவது, காரைக்கால் துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது போன்றவை நடக்கிறது.
சமீபத்தில், புதுச்சேரியில் ஜி-20 மாநாடு நடத்தப்பட்டது. அதுதொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அப்போது தான் சாலைகள் மேம்படும்; புதுச்சேரி நகரம் பொலிவு பெறும் என்ற நிலை உள்ளது.
ஒரே வாரத்தில் 10 சாலைகளை மேம்படுத்த முடிந்த இந்த அரசால், எம்.எல்.ஏ.,க்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவோ, சாலை போடவோ முன்வருவதில்லை. இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது என்று தெரியவில்லை. இதையெல்லாம் கண்டித்து தான் தி.மு.க., வெளிநடப்பு செய்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!