கள ஆய்வில் முதல்வர் என்ற புதிய திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று(பிப்.,01) வேலுார் வந்தார். இதற்காக இன்று காலை 10:15 மணிக்கு சாய்நகர் ஷீரடி விரைவு ரயிலில் காட்பாடிக்கு வந்தார். அங்கு முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் துவக்க விழா நடந்தது.
இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 784 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பள்ளி கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது: கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கருதி இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக பாழடைந்த பள்ளிகளை மேம்படுத்த 2400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் வேலுார் உள்ளிட்ட 36 மாவட்டங்களில் 784 கோடி ரூபாய் மதிப்பில் 2381 ஊராட்சி ஒன்றியம், நடுநிலைப்பள்ளில் 5351 புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டி பாழடைந்த பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
வேலுார் மாவட்டத்தில் 55 பள்ளிகளில் 114 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும். அந்தந்த பகுதியில் உள்ள மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலை சிற்றுண்டி திட்டம் அனைத்து பள்ளிகளிலும் விரைவில் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!