மதுரை: மதுரை மாவட்ட ஓய்வூதியர்களில் சிலர் இன்னும் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்காததால் அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் ஜூலையில் நடைபெறும் நேர்காணலில் (மஸ்டரிங்) தங்கள் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். அதை தொடர்ந்து அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படும்.
கடந்தாண்டு ஜூலை முதல் செப்., வரை நேர்காணலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 99 சதவீதத்தினருக்கும் மேல் பங்கேற்றனர். தற்போது 150க்கும் மேற்பட்டோர் இன்னும் வராமல் உள்ளனர். இவர்கள் நேர்காணல் விவரம் அறியாதவர்கள், இறந்தோர், வெளிநாடுகளில் வசிப்போராக உள்ளனர்.
இவர்களின் வங்கிக் கணக்குகளை கருவூலத்துறை முடக்கியுள்ளது. இவர்களில் சிலர் நீண்ட காலமாக ஓய்வூதியத் தொகையை வங்கிகளில் இருந்து எடுக்காமலும் உள்ளனர். இத்தகையோரின் ஓய்வூதிய தொகையை மீண்டும் அரசு கணக்கில் திரும்ப செலுத்தும் பணி நடக்கிறது.
மாவட்ட கருவூல அலுவலர் அண்ணாத்துரை கூறுகையில், ''பல ஆயிரம் கணக்குகளில் இன்னும் சொற்ப எண்ணிக்கையில் நேர்காணலுக்கு வராமல் உள்ளனர். அவர்களை கண்டறியும் பணி நடக்கிறது. தற்போது ஓய்வூதிய கணக்குகளை முடக்கி உள்ளதால் இதற்கு பின்பு மேலும் சிலர் வரவாய்ப்பு உள்ளது. அவர்களின் உண்மைத் தன்மை அறிந்து அரசு அனுமதியுடன் கணக்குகளை விடுவிப்போம்'' என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!