Advertisement

ஷீரடியில் சாய்பாபா....கோவையில் ஸ்ரீநாகசாயி! மஹா கும்பாபிஷேகம்: 2023 பிப்ரவரி 1, தை 18

''பக்தர்கள் என் குழந்தைகள், நான் உங்கள் தந்தை, நீங்கள் வணங்கும் தெய்வம் எதுவோ அதையே எப்போதும் வணங்குங்கள், விரைவில் உங்களை இறைவன் ஆசிர்வதிப்பார்.''

பல லட்சம் மக்கள் பக்தியோடும், நம்பிக்கையோடும் வணங்கும் ஷீரடி பாபாவின் சீர்மிகு ஆசீர் இது. இந்த வார்த்தைகள் தான், அவரின் கோவிலை நோக்கி பல ஆயிரம் பக்தர்களை ஓடோடி வரவைக்கிறது.

மனித குலம் பல யுகங்களை கடந்து, கடைசியாக கலியுகத்தில் வந்து நிற்கிறது. இந்த கலியுகம் நலமாக வாழ நாமசங்கீர்த்தனமே சிறந்தது என்று யோகிகளும், முனிவர்களும் கூறினர். அந்த வரிசையில் மனிதராய் அவதரித்து, அன்பால் அனைத்துயிர்களையும் தன் பால் ஈர்த்து, கலியுகத்தின் கருணை கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர், ஷீரடி சாய்பாபா.

பக்தர்களுக்கு மட்டுமின்றி, பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் பகுத்துண்டு பசிப்பிணி போக்கிய வள்ளல்; தண்ணீரில் விளக்கை எரியச்செய்யும் சக்தி படைத்தவர்: கல்லைக் கரைத்தது, உப்புத்தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது, விஷத்தை நீக்கியது என்று பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் ஏராளம்.

83 ஆண்டுகளுக்கு முன்அவ்வளவு மகிமை பொருந்திய ஷீரடி சாய்பாபாவுக்கு, தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவையில், 83 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் அமைக்கப்பட்டது. இங்குள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு, ஸ்ரீநாகசாயி மந்திர் என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்த கோவில் அமைந்ததாலேயே, சாய்பாபா கோவில் பேருந்து நிறுத்தம் உருவானது. சாய்பாபா காலனியும் உதயமாகி, நகரின் தனி அடையாளமாக மாறியுள்ளது.

இத்தனை ஆண்டுகளில், இந்த கோவிலுக்கு வந்து பாபாவிடம் அருள் பெற்றவர்களின் எண்ணிக்கை, பல லட்சங்களைத் தாண்டும். அந்த அன்பையும் ஆசியையும் பெற்ற பக்தர்களால், இக்கோவிலுக்கு மஹா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாகக் கொண்டாட்டத்துடன் நடத்தப்படுகிறது.

மடத்திலிருந்து மந்திர் வரைஇந்த இனிய நாளில், சக்தி வாய்ந்த இந்த தலத்தின் வரலாற்றை அனைவரும் அறிவது அவசியம்...

தென்னிந்தியாவில் ஷீரடி சாய்பாபாவின் மகிமைகளை மக்களிடம் எடுத்துரைத்து பக்தி மணம் பரவச் செய்தவர் நரசிம்ம சுவாமிகள். அவரது முயற்சியால் கோவையில் 1939 ஆம் ஆண்டில், ஸ்ரீ ஏ.வி.கே., சாரி மற்றும் வரதராஜ அய்யா மற்றும் அவரது சகோதரர் சி.வி.ராஜன் ஆகியோர் இணைந்து, கோவையில் சாய் இயக்கத்தை துவக்கினர். மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதுவே தென்னிந்தியாவின், அப்போதைய தமிழ்நாட்டின் (முந்தைய மதராஸ் மாகாணம்) ஸ்ரீ சாய்பாபாவின் முதல் ஆன்மீக மையமாகும். பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, ஒரு சிறிய ஓலைக்குடிசையில் ஸ்ரீ சாய்பாபா படத்தை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதுவே ஸ்ரீசாய்பாபா மடம் என்று பெயர் பெற்றது. வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாமசங்கீர்த்தனமும், கோஷ்டி பஜனையும் நடைபெற்று வந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின், அதே பகுதியில் சாய்பாபாவுக்கு பெரியளவில் கோவில் அமைப்பதற்கு, சாய்பாபாவின் பக்தரான டாக்டர் செங்காளியப்பனின் மூத்த சகோதரர் செல்லமுத்து கவுண்டர், 50 சென்ட் இடத்தை வழங்கினார். அதற்கு அருகிலேயே ஒரு ஏக்கர் நிலத்தைக் கொடுத்தார் சேலம் சி.வரதராஜ அய்யா. பெரிய அளவில் இடம் கிடைத்ததும் ஓலைக்குடிசை அகற்றப்பட்டு, கட்டடமாக மாற்றப்பட்டது.

கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து, ஜாதி, மத, இன பாகுபாடுகளை கடந்து பல ஆயிரம் பக்தர்கள் வந்து கூடிப் பிரார்த்திக்கும் சந்திப்புக் கூடமாக சாய்பாபா மடம் மாறியது. ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களில் நடக்கும் சாய் பஜனைக்கு வரும் கூட்டம் அதிகமானது. ஒவ்வொரு வார பஜனையும் ஒரு திருவிழா போல விமரிசையாக நடந்தது.

நேரில் தரிசனம் தந்த ஸ்ரீ நாகசாயி!இப்படித்தான், 1943 ஜனவரி 7 வியாழக்கிழமை மாலையில் (குரு-வாரத்தில்) சாய்பாபாவை போற்றி வணங்கும் பஜனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. பக்தர்கள் அனைவரும் இணைந்து, உள்ளம் உருகி நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், மோர்சிங், வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளின் சங்கமத்தில் உச்சஸ்தாயில் இருந்தது பஜனை.

அப்போதுதான் அந்த அதிசயம் அரங்கேறியது... கண்களை மூடி, உணர்ச்சியின் உச்சத்தில் எல்லோரும் பஜனை பாடிக் கொண்டிருந்தபோது, சாய்பாபாவின் படத்துக்கு மேலே நாகப்பாம்பு படமெடுத்து நின்றது. பளபளப்பான பார்வையுடன் திரிபுந்திரம், சங்கு, சக்கர உருவங்கள் மற்றும் தெய்வீக முத்திரைகளுடன் கூடிய வழக்கத்திற்கு மாறான சிறப்பு அடையாளத்துடன் இருந்தது அந்த நாகம்.

அதைப் பார்த்ததும் பக்தர்களின் நரம்புகளுக்குள்ளே மின்னலாய் ஒரு சக்தி பரவியது. பஜனையின் ஒலி பல மடங்கு அதிகமானது. விளக்கேற்றினர், ஆரத்தி எடுத்தனர். எதற்கும் எந்த அசைவையும் காட்டாமல், பக்தர்கள் மீது பார்வையை வீசியது அந்த நாகம். அதைப் பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதியது. கூட்டம் கூடக்கூட, நாமசங்கீர்த்தனம் எட்டுத்திக்கிலும் எதிரொலித்தது.

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரமில்லை... 17 மணி நேரம் அதே இடத்தில் நின்றது நாகம். அதன் கண்களில் இருந்து ஒளி வெள்ளம் பாய்ந்து கொண்டே இருந்தது. பெண்களும், குழந்தைகளும் என பல ஆயிரம் பக்தர்கள் வரிசையில் வந்து, பாம்பின் வடிவில் வந்த பாபாவின் அருளைப் பெற்றுத் திரும்பினர். கூடை கூடையாக பூக்களால் அர்ச்சிக்க, அங்கே ஒரு மலர் மலை உருவானது. நாகம் நகரவேயில்லை.

1961 பிப்ரவரி 26பல மணி நேரத்துக்குப் பின், பாபாவின் படத்துக்குப் பின் சென்ற அந்த பாம்பு, மெதுவாக ஊர்ந்து சென்று, அங்கிருந்த புற்றுக்குள் மறைந்தது. அதிலிருந்து அந்த புற்று வளர்ந்து வளர்ந்து இன்று பெரும் உயரமாக காட்சியளிக்கிறது. அந்த பாம்பின் வடிவில், கோவைக்கு சாய்பாபாவே நேரில் வந்து அருள் பாலித்ததாக பக்தர்கள் பரவசமடைந்தனர்.

அதற்கு பின்பு, சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம், நாளுக்கு நாள் அதிகமானது. மகிமை விளங்கும் இந்த இடத்தில், பாபாவுக்கு சிலை அமைக்க பக்தர்கள் முடிவெடுத்தனர். கோவில் நிர்வாகிகள் இதற்கான முயற்சியை மேற்கொண்டு, ஷீரடி சாய்பாபாவிற்கு (ஸ்ரீ நாக சாயி) பளிங்குசிலை அமைத்தனர். 1961 பிப்ரவரி, 26 அன்று, புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவால் இச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சாய்பாபா கோவிலை மையமாக வைத்து, சாய்பாபா காலனி என்ற பெயரில் குடியிருப்பு, போலீஸ் ஸ்டேஷன், தபால் நிலையம் ஆகியவை அரசு சார்பிலும் நடுநிலைப்பள்ளி, சாய்தீப் சமூகக்கூடம், காமதேனு பிரார்த்தனை கூடம் ஆகியவை, நாகசாய் டிரஸ்ட்டால் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படியாக கோவையின் மிக முக்கியமான அடையாளமாக சாய்பாபா கோவில் விளங்கி வருகிறது.

இன்றைக்கு கோவைக்கு நலமும் வளமும் பொங்கிப்பெருகுவதில் பாபாவின் அருளும் பிரதானமாகவுள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த கோவிலுக்குதான் இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது.

ஷீரடி சாய்பாபாவை போற்றும் வகையில் கோவிலுக்கு பின்பகுதியில் சாய்பாபா வித்யாலயம் என்ற நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில் 400 குழந்தைகள் படிக்கின்றனர்; 15 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.

இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு கைதேர்ந்த ஆசிரியர்களால், பரத நாட்டியம், கராத்தே, தையல் கலை, யோகா, மெடிட்டேசன், ஸ்மார்ட் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆகியவை கற்றுத்தரப்படுகிறது.பெரும்பான்மையான மாணவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களே, அக்குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி போதிக்கப்படுகிறது.குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக, திங்கள் முதல் புதன் வரை மூன்று நாட்களுக்கு சிறுதானியக்கஞ்சி (ஊட்டச்சத்து பானம்), கடந்த 22 ஆண்டுகளாக சாய் பவுண்டேசன் அமைப்பினரால் வழங்கப்படுகிறது.வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள், குழந்தைகளுக்கு முழுமையான அறுசுவை உணவும், முற்பகல் உணவு இடைவேளையின் போது, கேரட், நெல்லிக்காய், பேரீட்சை, பாசிப்பயறு சுண்டல், கடலை மிட்டாய், வாழைப்பழம் உள்ளிட்டவை சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது.பள்ளிக் குழந்தைகளின் அறிவு சார்ந்த வளர்ச்சிக்காக வனத்துறைக்குச் சொந்தமான, பழமையான அருங்காட்சியகத்திற்கும், தொழில்நுட்ப பல்கலைகழகங்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் கல்லுாரிகளுக்கும், ஆன்மீக, உயிரியல் பூங்காக்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கச் செய்கின்றனர்.ஏழை மாணவர்கள், படிப்பைத் தொடர உதவும் வகையில், பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழில் நுட்ப படிப்பு, கலை அறிவியல், டிப்ளமோ, இன்ஜினியரிங், வணிகப்பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கப்படுகிறது.------தென்னிந்தியாவில் முதன் முறையாக அமைக்கப்பட்ட, 83 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதல் ஷீரடி சாய்பாபா கோவிலான நாகசாயி மந்திரின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷே பெருவிழா இன்று, ஏகாதசி திதியில் நடக்கிறது.காலை 9:05 மணியிலிருந்து 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை 10:30 மணி முதல் மஹா அன்னதானம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு ஸ்ரீ நாகசாயி உற்சவமூர்த்தி திருவீதி உலா நடக்கிறது. நாளை (பிப்., 2) காலை 11:00 மணிக்கு ஸ்ரீ நாகசாயிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. இரவு 7:45 மணிக்கு தங்கத்தேரோட்டம் நடக்கிறது. பிப்.,3 அன்று மாலை 6:45 மணிக்கு மஹா திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.வாரமொரு நாள் அன்னதானம்!

அன்றாடம் பாபாவிற்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பூஜையின் நிறைவிலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. வியாழக்கிழமை நாட்களில் மட்டும், மதியநேரம் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், வயிறார உணவு அருந்திச் செல்கின்றனர்.மூன்றாம் பாலினத்தவர்களின் மேம்பாட்டிற்காக இலவசமாக ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. கல்வி மற்றும் மருத்துவம் போன்ற சமூகப்பணிகள், சாய்பாபா கோவில் மற்றும் நாகசாயி அறக்கட்டளை வாயிலாக தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.அணையா தீபமும்... அக்னிக்குழம்பும்!

ஷீரடி சாய்பாபா தான் வைத்திருந்த தண்டத்தில் பூமியைத் தட்டி, அதில் தண்ணீரையும், அக்னியையும் தனித்தனியாக வரவழைத்தார். அதை என்றென்றும் நினைவுபடுத்தும் வகையில், இன்றளவும் அக்னிக்குழம்பு தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது.ஷீரடி சாய்பாபா பளிங்கு சிலைக்கு பின் பகுதியில் இரண்டு அணையா தீபங்கள், கண்ணாடி பேழையில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன.அதே போல் சாய்பாபா கோவிலின் நுழைவாயிலின் தென்கிழக்கில் 'துனி' என்றழைக்கப்படும் ஒரு அக்னிச்சுவாலை, தணலோடு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த அக்னிச் சுவாலை ஷீரடியில் பாபாவால் உருவாக்கப்பட்ட அக்னியாகும். அதிலிருந்து எடுத்து வந்து இங்கு அக்னி உருவாக்கப்பட்டது.இதில் பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும், உடல் உபாதைகள் நீங்கி நோய்நொடியின்றி வாழவும், தேங்காய் மட்டை, நெல், தானியங்களை அக்னியில் இடுகின்றனர்.இந்த 'துனி' யிலிருந்து வெளியாகும் சாம்பல் 'உதி' என்றழைக்கப்படுகிறது அதுவே, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. உடல் உபாதைகள் மற்றும் நோய்நொடிக்கு மருந்தாகவும் 'உதி' பயன்படுத்தப்படுகிறது.ஆசிருடன் ஆரோக்கியம்!

சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள கோவில் வளாகத்தின் தென்கிழக்கில், ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை மையம் அமைந்துள்ளது. கோவில் திறந்திருக்கும் நேரங்களில், ஆலோசனைகளும், மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.சிறுநீரக பாதிப்பு, இருதய நோய், நுரையீரல் உள்ளிட்டவை பாதிப்பு ஏற்பட்டு, நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவியும் வழங்கப்படுகிறது. அதனால் இங்கு வரும் பக்தர்களுக்கு அருளாசியுடன் ஆரோக்கியமும் கிடைக்கிறது.புனித மரக்கோல்!

பாபா பயன்படுத்திய புனிதமான மரக்கோல் (தண்டம்), ஷீரடியிலிருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு வழிபாட்டிலும், சிறப்பு பூஜையிலும் புனிதகோலுக்கு முதல் மரியாதை செய்யப்படுகிறது; மலர் துாவி பூஜிக்கப்படுகிறது. இந்த புனித கோல், பாபாவின் காலடியை தொட்டு, அதன் பின்பு பக்தர்கள் தலையில் வைத்து ஆசிர்வதிக்கப்படுகிறது.ஒவ்வொரு பூஜையின் நிறைவிலும் பாபாவின் ஆசிர்வாதம், புனித மரக்கோலால் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பாபாவே தமது கரங்களை நீட்டி ஆசிர்வதிப்பதாக பக்தர்கள் மனம் மகிழ்கின்றனர்.விழாக்குழுவினர்!

அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவில் துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் சர்வோத்தமன், அறங்காவலர்கள் தியாகராஜன், சந்திரசேகர், சுகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவதற்காக 24 பேர் கொண்ட விழாக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது தவிர வரவேற்பு, மகளிர், மருத்துவம், சட்ட ஆலோசனை, விழா மேடை, பாதுகாப்பு ஆலோசனை உள்ளிட்ட ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் ஏராளமான தன்னார்வலர்களும், அன்றாடம் இங்கு வரும் பக்தர்களும் இந்த திருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்...

பாபாவின் பளிங்கு சிலைக்கு நேர் தெற்கில், அவரது பாதங்களும் பளிங்குக் கற்களால் பதிக்கப்பட்டு கண்ணாடிப்பேழையில் வைக்கப்பட்டுள்ளது. பாபாவுக்கு நடக்கும் அன்றாட பூஜைகளை தொடர்ந்து பாபாவின் பாதங்களுக்கும், சிறப்பு வழிபாடுகளும், ஆரத்தியும் ஒவ்வொரு முறையும் காண்பிக்கப்படும். மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்படும். பக்தர்கள் இரு கரங்களால் தொட்டு வழிபாடு செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது.கோவைதான் முதல் ஊர்!

ஷீரடி சாய்பாபாவிற்காக, 2007ம் ஆண்டில் கோவையில் தங்கத்தேர் உருவாக்கப்பட்டது. நம்நாட்டில் பாபாவிற்கென்று தங்கத்தேரை உருவாக்கிய பெருமை, கோவைக்கே உண்டு. ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் கோவில் பிரகாரத்தின் நான்கு திசைகளிலும், தங்கத்தேரில் ஷீரடி சாய்பாபா உற்சவமூர்த்தி வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற தங்கத்தேரோட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பக்தர்கள் முன்பதிவு அடிப்படையிலேயே தேர்வு செய்து அனுமதிக்கப்படுகின்றனர்.ஓவியமாய்!

ஷீரடியில் நடந்துள்ள அற்புதங்களைக் கேட்டால், உடலும் மனதும் சிலிர்க்கும். அவற்றை பக்தர்கள் அறியும் வகையில், கோவை சாய்பாபா கோவிலின் மகா மண்டபத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஷீரடி பாபா குழந்தைகளோடு சலங்கை அணிந்து நடனமாடுதல், பெரிய மண்பானையில் உணவு சமைத்து வழங்குதல், மூலவரை சுற்றி வலம் வரும் பாதையில் கோவில் உருவாகக் காரணமான நரசிம்ம சுவாமிகளின் படம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.வழிபாடு!

ஷீரடி சாய்பாபா கோவில் வளாகத்திற்கு வடமேற்கில் பரிவார தெய்வங்களுக்கான சன்னிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆஞ்சநேயர், விநாயகர், நாகர், நவக்கிரஹம், சுப்ரமணியர், லிங்கவடிவமான சிவபெருமான் ஆகியவை ஒருங்கிணைந்த சன்னிதிகளாக அமைந்துள்ளன. இங்கு அமாவாசை, பவுர்ணமி, சங்கடஹரசதுர்த்தி, சத்யநாரயணபூஜை, மாதப்பிறப்பு, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து வைபவங்களும் நாகசாயி டிரஸ்ட் மூலம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.வாசகர் கருத்து (1)

  • Ram pollachi -

    முனியப்பன், கருப்ராயன் மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் எல்லா சாமியும் மறந்து போச்சு இப்ப எல்லாம் சாய்பாபா வை வழிபடுவது தற்போது சமூக அந்தஸ்தாக மாறிவிட்டது ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement