எல்லை தாண்ட இனி எப்போதும் வாய்ப்பில்லை! பல்கலைகளுக்கு நீதிமன்றம் கடிவாளம்
கல்லுாரிகளுக்கு நேரடியாக வந்து கல்வி கற்க முடியாத மாணவர்கள் நலன் கருதி, தொலைதுார கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்துக்கு, பலரது மத்தியில் தற்போதும் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், சில பல்கலைகள், இதை வர்த்தக நோக்கில் திசை திருப்பியதால், கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்கின்றன. 2012ல், அண்ணாமலை பல்கலை மற்றும் பல்கலை மானியக்குழுவும் நீதிமன்றத்தை அணுகின. தொடர்ந்து, பல்வேறு கட்டங்களாக, பெரியார், பாரதிதாசன், சென்னை பல்கலை, இதே சிக்கல்களுக்காக, பல்கலை மானியக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகின.
இந்நிலையில், 2016ல், தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை, அறிவியல், மேலாண்மை கல்லுாரிகள், பல்கலை மானியக்குழு விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி, பாரதியார் பல்கலை தொலைதுார தனியார் கல்வி மைய (பிரான்சைஸ் சென்டர்) செயல்பாடுகளுக்கு எதிராக, களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம், தொலைதுார தனியார் கல்வி மையங்கள் இயங்க தொடர்ந்து தடை விதித்தும், பல்கலைகள் மீண்டும் மீண்டும் மேல் முறையீடு செய்து வந்தன. 2018ல் பாரதியார் பல்கலையின் கீழ் விதிமுறைமீறி செயல்பட்டு வந்த, பல்வேறு தனியார் மையங்கள், தொடர்ந்து செயல்பட அனுமதி கோரி, இவ்வழக்கில் இணைந்தன. வழக்கின் தீர்ப்பில், மேலுள்ள தகவல்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, எவ்வித உள்கட்டமைப்பு, அடிப்படை தகுதியில்லாத தனியார் கல்வி மையங்களுக்கு, வணிக நோக்கில் சில பல்கலைகள் அனுமதி வழங்கியதையும், அதில், பாரதியார், பெரியார் போன்ற மாநில பல்கலைகள், இதுபோன்ற வணிக செயல்பாடுகளில் ஈடுபட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2020 பல்கலை மானியக்குழு விதிமுறைகளின் படி, பல்கலை தொலைதுார மைய கல்வி மையங்களை செயல்படுத்த, அனைத்து அதிகாரமும், பல்கலை மானியக்குழுவுக்கு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உச்சநீதிமன்றத்தில் நடந்த, 'யாஸ் பால்' என்பவர் தொடுத்த வழக்கு முடிவுகளின் படி, பல்கலைகள் வெளிமாநில மாணவர்களை, தங்கள் பல்கலையில் சேர்த்துக் கொள்ளவும், பல்கலைகள் தங்கள் எல்லைக்கு அப்பால் மற்றும் வெளி மாநிலங்களிலும் சேர்க்கை, வகுப்பு, தேர்வு செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, எல்லை தாண்டி கல்வி செயல்பாடுகளை மேற்கொள்ள மனு தாக்கல் செய்த பல்கலையின், தனியார் கல்வி மையங்களின் வழக்குகள் தள்ளுபடி செய்வதாக உத்தரவிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு முன் சேர்ந்து பட்டம் பெற்ற மாணவர்களின் சான்றிதழ்கள் செல்லும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!