காட்டுயிர்களை புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர்களின் கனவு, காட்டில் கம்பீரமாக உலாவும் புலியை, எவ்வளவு கஷ்டப்பட்டாவது எடுக்க வேண்டும் என்பது தான்.
நாடு முழுதும் காடுகள் நிறைந்திருந்தாலும், புலிகள் உலாவுவது, சில காடுகளில் மட்டுமே. இதில் மிக முக்கியமானது, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி வனச்சரகம். மைசூரில் இருந்து 90 கி.மீ., துாரத்தில் உள்ளது.
'கனவை நனவாக்கும் தருணம், கபினியில் உண்டு' என்கிறார், சென்னையைச் சேர்ந்த ஷியாம் பாலகிருஷ்ணன்.
காட்டுயிர் புகைப்படக்காரரான இவர், சமீபத்தில் கபினி வனச்சரகத்திற்கு சென்று கேமராவினால் புலியை வேட்டையாடி வந்துள்ளார்.
ஒவ்வொரு படத்திலும், காட்டில் புலியின் நடமாட்டம் எப்படியெல்லாம் இருக்கும் என, மனதில் கற்பனை பூக்கிறது.
ஷியாம் தங்கியிருந்த நான்கு நாட்களுமே, புலிகள் இவரது கேமரா கண்களுக்கு தட்டுப்பட்டு இருக்கிறது.
அதிலும், அங்குள்ள 'மேகி' என்ற புலி, புதிதாக பிரசவித்த குட்டிகளுடன் இரைக்காக உலா வந்துகொண்டே இருக்கிறதாம்.
புலிகள் தவிர, காட்டு யானை, மான்கள், கழுகு, மந்தி என, காட்டிற்கான எல்லா உயிர்களும் உலாவும் பகுதியாக கபினி வனச்சரகம் இருக்கிறதாம்.
ஷியாம் கூறியதாவது:
புலிகளை படம் எடுக்க விரும்புவோர், இப்போதே திட்டமிடுங்கள். கபினிக்கு சென்று வாருங்கள். உங்கள் கேமராவில் புலிகளை வேட்டையாடுங்கள். அது மட்டுமல்ல கொட்டிக்கிடக்கும் இயற்கையை காணலாம். கூடவே கானகங்கள் நமக்கு அளிக்கும் மிகப்பெரிய பங்களிப்பையும் உணர முடியும்.
கபினிக்கு செல்ல விரும்புவோர் JLR Jungle Lodges & Resorts என்ற இணையதளத்திற்கு சென்று, தங்குவதற்கும், காட்டுலா செல்வதற்கான ஜீப் சவாரிக்கும், பதிவு செய்துகொள்ள வேண்டும்.
கர்நாடக அரசின் வனத்துறையே இதை ஏற்று நடத்துவதால், மிகவும் பாதுகாப்பாக உள்ளது.
உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப, அறைகளையும், தங்கும் நாட்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!