கட்டுமான நிறுவனத்துக்கு வாரன்ட் ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு
சென்னை மேடவாக்கம் அருகில் ஜல்லடையன்பேட்டையில் தனியார் நிறுவனம் சார்பில், 2013ல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் வீடு வாங்க, நீலா கண்ணன் என்பவர், 2013ல் ஒப்பந்தம் செய்தார்.
இதற்காக, 13.07 லட்சம் ரூபாயை அவர், பல்வேறு தவணைகளாக செலுத்தி உள்ளார். ஒப்பந்தப்படி அந்நிறுவனம், 2015ல் வீட்டை ஒப்படைத்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட கால கெடுவில் வீடு ஒப்படைக்கப்படாததால், நீலா கண்ணன் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார்.
இதில் மனுதாரர் செலுத்திய தொகையை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஆணைய விசாரணை அலுவலர் சரவணன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை, கட்டுமான நிறுவனம் செயல்படுத்தாத நிலையில், இந்த வழக்கு, ஆணையத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை அலுவலர் சரவணன் பிறப்பித்த உத்தரவு:
ஆணைய உத்தரவுப்படி, மனுதாரருக்கு உரிய இழப்பீட்டை வழங்காமல் கட்டுமான நிறுவனம் தாமதம் செய்து வருவது உறுதியாகிறது. எனவே, அந்த நிறுவனத்துக்கு எதிராக 'வாரன்ட்' பிறப்பித்து, வருவாய் மீட்பு சட்டப்படி, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!