தேனி-'' வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்த மூன்று மணிநேரத்தில் விவசாயின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் தேடி வருவதாக'' தேனி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார். அவர் தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:
ஒழுங்கு முறை விற்பனை கூட செயல்பாடு பற்றி
விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு கமிஷன் இல்லாமல் நல்ல விலைக்கு விற்று கொடுப்பது விற்பனை கூடத்தின் நோக்கம். விற்ற மூன்று மணி நேரத்தில் விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. விற்பனையாகும் வரை பொருட்கள் பாதுகாக்கப்படுகிறது. இங்கு வைக்கப்படும் பொருட்கள் மழை, வெயில், எலி போன்றவற்றால் பாதிப்படைவதில்லை.
எத்தனை இடங்களில் இத் துறையின் குடோன்கள் உள்ளது மாவட்டத்தில் உலர் குடோன்கள் தேனி, கம்பம், போடி,சின்னமனுார், தங்கம்மாள்புரம், கெங்குவார்பட்டியில் உள்ளது. இங்கு 13,800 டன் விளை பொருட்கள் பாதுகாக்கலாம். குளிர்பதன கிடங்குகள் தேனி, கம்பம்,சின்னமனுாரில் உள்ளது. இதில் 780 டன் வேளாண் பொருட்கள் பாதுகாக்கலாம்.
பாதுகாக்க பொருளின் தரம் எப்படி இருக்க வேண்டும் விளை பொருட்களில் கட்டாயம் உலர்த்தியிருக்க வேண்டும். ஈரப்பதம் 12 சதவீதம் இருக்க வேண்டும். மூடை 50 அல்லது 60 கிலோவாக இருக்கலாம். பொருளில் ஈரப்பதம் அதிகம் இருந்தால் உலர்த்தி பின் கிடங்கில் வைக்கலாம்.
விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை உலர்த்த தேனி 6,போடி 1, கம்பம் 3, சின்னமனுார் 3 என 13 உலர் களங்கள் உள்ளது. இரண்டு இடங்களில் சோலார் உலர்த்திகள் உள்ளது.
என்ன வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது
நெல், சோளம் , ராகி உள்ளிட்ட தானியங்கள், உளுந்து, துவரை, கொண்டை கடலை உள்ளிட்ட பயறு வகைகள், கடலை, எள், பருத்தி விதை, ஆமணக்கு உள்ளிட்ட எண்ணை வித்துக்கள், ஏலக்காய், சிவப்பு மிளாகாய், சுக்கு, மஞ்சள், கரும்பு,வெல்லம், முந்திரி, புளி, ரப்பர், பஞ்சு, தேங்காய், கிழங்குகள் விற்பனை செய்து தரப்படுகிறது.
மின்னனு தேசிய வேளாண் சந்தை நடைமுறையில் உள்ளதா
தற்போது இந்த முறையில் அதிக அளவிலான வேளாண் பொருட்கள் விற்பனை செய்து தருகிறோம். மக்கா சோளம் வெளி மார்கெட்டை விட இங்கு கூடுதல் விலையில் விற்பனை செய்து தருவதால் பெரும்பாலான விவசாயிகள் இங்கு வர்த்தகம் செய்வதை விரும்புகின்றனர். மக்கா சோளம் தரம் நன்றாக உள்ளதால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா வியாபாரிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
விவசாயிகளிடம் கட்டணம் வசூல் பற்றி
விவசாயிகளிடம் விற்பனை, சந்தை கட்டணம் ஏதும் வசூல் செய்வதில்லை. பொருட்களை வாங்கும் வியாபாரிகளிடம் மட்டும் 1 சதவீத சந்தை கட்டணம் அரசு உத்தரவின்படி வசூல் செய்யபடுகிறது.விவசாயிகள் விளை பொருட்களை 15 நாட்கள் இலவசமாக வைத்துக்கொள்ளலாம். அதன் பின் ஒரு குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 10 பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது.
விவசாயிகள், வியாபாரிகளுக்கு கடன் திட்டங்கள் பற்றி
விவசாயிகள் தங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வரை பொருளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு தேவைப்பட்டால் பொருளீட்டு கடனாக 75 சதவீதம் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் தரப்படுகிறது.
அவர்கள் பொருள் விற்பனை செய்யப்பட்டதும். கடன் பிடித்தம் போக மீதிப்பணம் வழங்கப்படும். வியாபாரிகளுக்கு பொருளின் மதிப்பில் 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2, லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கடன் இலக்கு ரூ.95 லட்சம். இதில் ரூ.45 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்கி உள்ளோம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!