தி.மு.க., கவுன்சிலரை வெட்டி கொல்ல முயற்சி மேட்டூரில் பட்டப்பகலில் மர்ம கும்பல் அட்டூழியம்
மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த, தி.மு.க., கவுன்சிலரை, மர்ம கும்பல் பட்டப்
பகலில் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குள்ளவீரன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாஜலம், 55; தி.மு.க.,வை சேர்ந்த இவர், மேட்டூர் நகராட்சி, 14-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி, 51. மேட்டூர், 1வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
நேற்று மதியம், 3:00 மணிக்கு, மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் பங்கேற்க, வெங்கடாஜலம்,
அவரது காரில் வந்து அலுவலகம் முன் இறங்கினார். அப்போது மர்ம கும்பல் வெங்கடாஜலத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. தப்பி ஓடிய வெங்கடாஜலம், நகராட்சி அலுவலகத்தில் புகுந்து கதவை பூட்டிக்கொண்டார். இச்சம்பவத்தை பார்த்து மக்கள் கூச்சலிட, மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மேட்டூர் டி.எஸ்.பி., சண்முகம் தலைமையில் போலீசார், படுகாயம் அடைந்த வெங்கடாஜலத்தை மீட்டனர். மேல் சிகிச்சைக்கு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடந்த, 2011ல், அ.தி.மு.க., முன்னாள் நகர செயலர் பழனிசாமி, 2012ல், பழனிசாமியின் மைத்துனர் மாதேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் வெங்கடாஜலம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்டார். தவிர, வெங்கடாஜலம் மீது மேட்டூர் ஸ்டேஷனில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் முன்விரோதத்தில், இந்த கொலை முயற்சி நடந்திருக்கலாம். தனிப்படை அமைத்து தப்பிய கும்பலை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!