மேயர் கவுன்சிலர் வருவாரா, மாட்டாரா? மேயரிடம் மல்லுக்கட்டிய மக்கள்
போத்தனூர் : சுந்தராபுரம் அடுத்து மாநகராட்சியின், 97வது வார்டுக்குட்பட்ட பிள்ளையார்புரம் செல்லும் வழியில், தரைமட்ட பாலம் உள்ளது. மழைக்காலத்தில் பாலத்தின் மேற்பகுதியில் தண்ணீர் செல்லும். இத்தரைமட்ட பாலத்தினை உயர்த்தி கட்ட, மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மேயர் கல்பனா, தெற்கு மண்டல தலைவர் தலைட்சுமி, உதவி கமிஷனர் அண்ணாதுரை உள்ளிட்டோர் அவ்விடத்தை பார்வையிட்டனர்.
பாலத்தை உயர்த்திக் கட்ட மதிப்பீடு தயாரிக்குமாறு, உதவி கமிஷனரிடம் மேயர் அறிவுறுத்தினார்.
அப்போது கஸ்தூரி கார்டன் பகுதியை சேர்ந்த மூன்று பெண்கள் அங்கு வந்தனர். மேயர் கல்பனாவிடம், 'எங்கள் வார்டு கவுன்சிலர் நிவேதா. வெற்றி பெற்ற பின் வரவேயில்லை.
எங்கள் குறைகளை யாரிடம் கூறுவது? அப்பெண்ணை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். நாங்கள் ஓட்டு போட்டு ஜெயித்தவர், எங்கள் பிரச்னையை தீர்க்க வராமல் எதற்கு பதவியில் இருக்கிறார். யாரேனும் ஒருவர் பொறுப்பேற்றால் பிரச்னையில்லை' என கூறினர்.
மேயரால் அவர்களுக்கு பதில் கூற முடியவில்லை. அப்போது, 100வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், "நாங்கள் இருக்கிறோம். எங்களிடம் பிரச்னைகளை கூறுங்கள்," என்றார்.
ஆவேசமடைந்த பெண்கள், "இந்த வார்டு கவுன்சிலர் இருக்கும்போது, உங்களிடம் எதற்கு நாங்கள் வர வேண்டும்,'' என்றதுடன், மேயரை நோக்கி, ''நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா,'' என கேட்டனர்.
அதிர்ச்சியடைந்த மேயர், ''எனக்கு மூன்று நாட்கள் டைம் கொடுங்கள். நாளை (நேற்று) கவுன்சிலர் கூட்டம் நடக்கிறது. அதில் பேசி ஒரு முடிவு கூறுகிறேன்," என்றார்.
அதற்கு பெண்கள், "நீங்கள் பதில் கூறாவிடில் உங்கள் மீது புகார் செய்வோம்," என்றனர். கண்டிப்பாக பதில் கூறுவதாக கூறிய மேயர், அங்கிருந்து சென்றார்.
இச்சம்பவம், ஆளும் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
இதில் மேயராக ஆசைப்பட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் நிவேதா கலந்து கொண்டார். ஆனால் மேயர், அவரது வார்டு பெண்கள் கேட்டது குறித்து எதுவும் கூறவில்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!