Advertisement

ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆரை இணைக்க ரூ.180 கோடியில் சுழற்மேம்பாலம்

சென்னை சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் விதமாக, 180 கோடி ரூபாயில் சுழற்மேம்பாலம் அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, சி.எம்.டி.ஏ.,வுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டால், பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை இடையிலான போக்குவரத்து மேம்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் பிரதான நீர்வழித்தடமான பகிங்ஹாம் கால்வாயின் கிழக்கில், கிழக்கு கடற்கரை சாலையும், மேற்கில் பழைய மாமல்லபுரம் சாலையும் அமைந்துள்ளது. தொழில், வணிகம், சுற்றுலா ரீதியாக இந்த இரண்டு சாலைகளும் மிக முக்கிய சாலைகளாக உள்ளன.

சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி செல்லும் வாகனங்கள் மட்டுமே, இந்த சாலையை பயன்படுத்தி வந்தன.

ஆனால், கிழக்கு கடற்கரை சாலையில் அதிகரித்துள்ள குடியிருப்புகள், சுற்றுலா மையங்கள், வணிக மையங்கள் காரணமாக, இந்த சாலையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளது.

இதேபோல், பழைய மாமல்லபுரம் சாலையில் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகரித்துள்ளதால், இங்கும் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

சென்னையில் தரமணி, திருவான்மியூர் பகுதியில் மட்டுமே, இந்த சாலைகளுக்கான இணைப்பு வசதி உள்ளது.

இதை விட்டால் சோழிங்கநல்லுார், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் தான், இவ்விரு சாலைகளுக்கான இணைப்பு வசதி உள்ளது.

இதனால், பழைய மாமல்லபுரம் சாலையில் பயணிப்போர், கிழக்கு கடற்கரைக்கு சாலைக்கு மாறவும், கிழக்கு கடற்கரை சாலையில் பயணிப்போர் பழைய மாமல்லபுரம் சாலைக்கு மாறவும், நீண்ட தொலைவு சென்று திரும்ப வேண்டியுள்ளது.

இதற்கு தீர்வாக, பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றை இணைக்க, 180 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என, 2021 - 22ல் தமிழக அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது.

இதில் கூறப்பட்டுள்ளதாவது:

 பழைய மாமல்லபுரம் சாலை - கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில், ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகருக்கும், ஈஞ்சம்பாக்கத்துக்கும் இடையே, பகிங்ஹாம் கால்வாய் மீது, 180 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட சுழற்சாலை மேம்பாலம் அமைக்கப்படும்

 இப்பகுதியில் ஏற்கனவே உள்ள சாலைகளை அகலப்படுத்தி, இப்புதிய மேம்பாலம் அமைக்கப்படும்

 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலர்கள் நிலையில், அக்., 7ல் நடந்த ஆலோசனை அடிப்படையில், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது

 பகிங்ஹாம் கால்வாயில் மேல் உயர்மட்ட பாலமும், அதன் இருபுறங்களிலும், 220 மீட்டர் நீளத்துக்கு சாய்வு தளமும் அமைக்கப்படும்

 புதிய மேம்பாலத்தை இணைக்கும் வகையில் பகிங்ஹாம் கால்வாயின் கரையை ஒட்டி, சாலைகள் அமைக்கப்படும்

 பகிங்ஹாம் கால்வாயின் இரண்டு கரைகளிலும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் புதிய மேம்பாலத்துடன் இணைக்க தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த, சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்

 இந்த வழிமுறைகள் அடிப்படையில், சுழற்சாலை முறையில் இங்கு மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், புதிய வழிமுறைகளை, எல் அண்டு டி நிறுவனம் வாயிலாக ஆய்வு செய்யப்படும்.

இதற்கான நடவடிக்கைகளை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த ஆணை வாயிலாக, புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டால், பழைய மாமல்புரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை இடையிலான போக்குவரத்து மேம்படும். இப்பகுதியில் உள்ள மக்கள் விரைவாக சென்றுவர வழி ஏற்படும்.



நெடுஞ்சாலைத் துறை நிலை

சென்னையில் ஜி.எஸ்.டி., சாலை, பழைய மாமல்லபுரம் சாலையை இணைக்கும் வகையில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, கடந்த 2000ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவற்றுக்கு இடையே, 16 கி.மீ., தொலைவுக்கு, நான்கு வழிப்பாதை அமைக்கப்பட்டது.ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து இதில் வரும் வாகனங்கள் பழைய மாமல்லபுரம் சாலைக்கு எளிதாக செல்ல முடியும். ஆனால், கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல வேண்டும் என்றால், சோழிங்கல்லுார் வரை சென்று திரும்பி வர வேண்டும்.இதற்கு தீர்வாக, துரைப்பாக்கத்தில் ரேடியல் சாலை, பழைய மாமல்லபுரம் சாலை சந்திப்பில் இருந்து, நேரடியாக கிழக்கு கடற்கரை சாலை செல்ல, 180 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம் கட்ட, 10 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது.இதற்காக, பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் வரை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நான்கு வழி சாலையும் அமைக்கப்பட்டது.பகிங்ஹாம் கால்வாயின் கிழக்கு பக்கத்தில் நிலங்கள் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால், இத்திட்டம் பாதியில் முடங்கி உள்ளது. தற்போது அரசு அறிவித்துள்ள புதிய மேம்பாலத் திட்டம் இத்துடன் இணைத்து செயல்படுத்தப்படுமா அல்லது தனியாக கண்ணகி நகரில் செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.



மாநகராட்சி திட்டம் அம்போ?

நெடுஞ்சாலை துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை போன்று, சென்னை மாநகராட்சியும் இதில் சிறப்பு திட்டங்களை அறிவித்தது. கடந்த 2019ல் இங்கு, சிறிய அளவிலான உட்புற சாலைகளை இணைக்கும் வகையில் பகிங்ஹாம் கால்வாய் மீது ஆறு இடங்களில் பாலம் அமைக்கப்படும் என, மாநகராட்சி அறிவித்தது. இத்திட்டம், 30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்தது. சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டதில் எழுந்த சிக்கல் காரணமாக, இத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement