வால்பாறை : வால்பாறையில், அவசரகதியில் திறக்கப்பட்ட நகராட்சி தாவரவியல் பூங்கா, பராமரிப்பு இல்லாததால் புதரில் மறைய துவங்கியுள்ளது. 5.6 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட பூங்கா பொலிவிழப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரும் வால்பாறையில், படகு இல்லம், தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும், என, உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நகராட்சி சார்பில், வால்பாறை நகரில், 4.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு இல்லமும், 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்காவும் அமைக்கப்பட்டது.
சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்குள், அவசரகதியில் இவைதிறக்கப்பட்டது.
ஆனால், பணிகள் நிறைவடையாமல் திறக்கப்பட்டதால், மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. தி.மு.க., ஆட்சியிலும் பணிகளை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படாமல் இருந்தது.
பணிகளை நிறைவு செய்து, பூங்கா மற்றும் படகு இல்லத்தை திறக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த செப்., மாதம், 22ம் தேதி வால்பாறை நகராட்சி தாவரவியல் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
தற்போது பூங்காவில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், நகராட்சி பூங்காவை சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால், பாம்புகள் அதிகரித்துள்ளன.
மாலை நேரத்தில் சிறுத்தை புதரில் பதுங்கி, மக்களை அச்சுறுத்துகிறது. அவசரகதியில் பூங்கா திறக்கப்பட்டதால், பூச்செடிகள் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.
பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா, பொலிவிழந்து காணப்படுவதால் மக்களும், சுற்றுலா பயணியரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறையில், பல்வேறு போராட்டத்திற்கு பின், தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டாலும், ரசிக்கும் படியாக எதுவுமே இல்லை.
பூங்கா முழுவதிலும் புதர் சூழ்ந்துள்ளது. இதனால், மாலை நேரத்தில் பூங்காவை ரசிக்க செல்லும் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
மேலும், பூங்காவில் சுற்றுலா பயணியர் வசதிக்காக கட்டப்பட்டுள்ள சிற்றுண்டி கட்டடம் திறக்கப்படவில்லை. இதனால், அனைத்து தரப்பினரும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். வால்பாறை நகரில் பூங்கா திறக்கப்பட்டும், ரசிக்க முடியாத நிலையில் உள்ளது.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பூங்காவை சுற்றிலும், விரைவில் சுற்றுச்சுவர் கட்டப்படும். பூங்காவில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பூங்காவை காண வரும் மக்களிடம் இனி கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பின் பூங்காவில் உள்ள சிற்றுண்டி கட்டடம் திறக்கப்படும்,' என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!