எங்களுக்கு முறையா தகவலே தெரிவிக்கல!கிராம சபை கூட்டம் குறித்து மக்கள் புகார்
அன்னுார்:அன்னுாரில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.நுாறு நாள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குளம், குட்டை துார்வாருதல், சாலை அமைத்தல், தனியார் தோட்டங்களில் வரப்பு அமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல், வட்டப்பாத்தி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன. தினமும் சராசரியாக, 1,500 பேர் பணிபுரிகின்றனர்.இத்திட்டத்தில் வரும் நிதியாண்டில் செய்ய வேண்டிய பணிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் அன்னுார் வட்டாரத்தில், 21 ஊராட்சிகளிலும் நேற்று நடந்தது.அல்லப்பாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் வெங்கிடுபதி தலைமை வகித்தார்.கூட்டத்தில் துார்வாருதல், தனியார் தோட்டங்களில் வரப்பு அமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தேர்வு செய்யப்பட்டன.ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட பணிகள் குறித்த அறிக்கை ஒன்றிய அலுவலகத்துக்கு அனுப்பப்படும் என, பற்றாளர்கள் தெரிவித்தனர்.சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து கெம்பநாயக்கன்பாளையம் பொதுமக்கள் கூறுகையில்,'வழக்கமாக கிராம சபை கூட்டம் குறித்து ஏழு நாட்களுக்கு முன்னதாகவே துண்டு பிரசுரங்கள் வீடு, வீடாக வழங்கப்படும். ஊராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். 'டாம்-டாம்' மூலம் அறிவிக்கப்படும். 'வாட்ஸ்அப்' வாயிலாகவும் தெரிவிக்கப்படும். ஆனால் இந்த கூட்டம் குறித்து முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை.வீடு, வீடாக துண்டு பிரசுரம் விநியோகிக்கவில்லை. ஊராட்சியில் எங்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது என்றே தெரியவில்லை. இதேபோல் பல ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!