உலக அளவில் காலநிலை மாற்றத்திற்கு, மாசடைந்த காற்று முக்கிய காரணமாக உள்ளது.'காற்று மாசுபடுதலைக் குறைக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு குழு கோரிக்கை வைத்துள்ளது.தற்போது, காற்று மாசுபடுதலுக்கான கார்பன் நச்சு வாயுவை வெளியேற்றுவதில், முதல் மூன்று இடங்களில் இந்தியா உள்ளது. இதனால், நாட்டில் 2070ம் ஆண்டுக்குள் காற்று மாசு பூஜ்ஜிய நிலையை அடைவதற்கான பணிகளை, மத்திய அரசு துவக்கி உள்ளது.இதன்படி, சென்னையில் நச்சு வாயு வெளியேற்றத்தை குறைப்பதன் ஒரு பகுதியாக, 'கார்பன் கிரெடிட்' திட்டத்தை, மாநராட்சி செயல்படுத்த உள்ளது.
'கார்பன் கிரெடிட்'
கார்பன் நச்சு வாயு வெளியேற்றத்தை குறைத்து, அதிக அளவு நச்சு வாயு உறிஞ்சு திறன் இருந்தால், அதன் அடிப்படையில் 'கார்பன் கிரெடிட்' என்பது கணக்கிடப்படுகிறது.உதாரணமாக, மரங்கள் அதிகளவு கார்பன் நச்சு வாயுவை உறிஞ்சும் தன்மை கொண்டவை. 'சென்னையில் எத்தனை மரங்கள் உள்ளன; அவற்றால் எவ்வளவு கார்பன் வாயுவை உறிஞ்ச முடியும்' என்ற அடிப்படையிலும், கார்பன் கிரெடிட் கணக்கிடப்படுகிறது.
இது போன்ற திட்டங்களின் படி, காற்று மாசை குறைத்து, 'கார்பன் கிரெடிட்' மதிப்பை பெற, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.சென்னையை பசுமையாக்க, மாநகராட்சி மேற்கொள்ளும் ஐந்து திட்டங்களை ஆய்வு செய்து, அதன் வாயிலாக 'கார்பன் கிரெடிட்' மதிப்பை, 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவனம் தயார் செய்துள்ளது.சென்னையில் அரசு கட்டடங்களில் அமைக்கப்பட்ட 'சோலார் பேனல்' திட்டத்தின் வாயிலாக 7,686; பயோ காஸ் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் வாயிலாக 5,118; சோடியம் விளக்குகளை எல்.இ.டி., விளக்குகளாக மாற்றிய திட்டத்தில் 613; பசுமை பரப்பு மற்றும் 'சைக்கிள் ஷேரிங்' திட்டத்தில் 86 ஆயிரத்து 805 என, மொத்தம் 1 லட்சத்து 222 கார்பன் கிரெடிட் மதிப்பு, மாநகராட்சிக்கு தற்போது கிடைத்துள்ளது.இவற்றை மதிப்பாக கணக்கிடும் போது, 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிலையில் மாநகராட்சி உள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நம் நாட்டில், இந்துார் நகரம் 'கார்பன் கிரெடிட்' முறையை செயல்படுத்தி வருவாய் ஈட்டி வருகிறது. அதற்கு அடுத்தபடியாக, சென்னை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட அளவிலான நச்சு கார்பன் மட்டுமே வெளியேற்றப்படுவதை அனுமதிக்க முடியும். அதைவிட அதிக அளவு கார்பனை வெளியேற்றப்பட்டால், அவற்றை உறிஞ்சுவதற்கான திட்டங்களை செயல்படுத்தி இருக்கவேண்டும்.
நடவடிக்கை
அவ்வாறு செயல்படுத்தாத தொழிற்சாலைகள், கார்பன் கிரெடிட் ஸ்கோரை வாங்கிப் பயன்படுத்தலாம். அதாவது, சென்னை மாநகராட்சி நிர்வாகம், தான் ஏற்படுத்தும் மாசு அளவை விட அதிகளவில், காற்றை துாய்மைப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே மாநகராட்சியிடம், அதிகளவில் கார்பன் கிரெடிட் ஸ்கோர் உள்ளது. இதை, அதிகளவில் மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்தலாம். இதனால், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
இதுபோன்று கார்பன் கிரெடிட்டை விற்பனை செய்வதன் வாயிலாக, மாநகராட்சிக்கு 1 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். இவற்றை மேலும் அதிகப்படுத்தும் வகையில், திடக்கழிவு மேலாண்மை, விவசாயம், கழிவுநீர் சுத்திகரிப்பு, பசுமை பரப்பை அதிகரித்தல், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
திட்டம் ஏன்?
ஒரு தொழிற்சாலை, விதிகளை விட அதிகளவில் கார்பனை வெளியேற்ற, அதற்கான அளவில் கிரெடிட் மதிப்பு வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில், வெளியில் இருந்து வாங்க வேண்டும். இதை தவிர்க்க, அந்நிறுவனங்களே பல்வேறு பசுமை திட்டங்களை செயல்படுத்த முன்வரும். இதற்காகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வருவாய் எப்படி?
சென்னை மாநகராட்சியிடம், 10 ஆயிரம் கார்பன் கிரெடிட் மதிப்பு இருக்கும்பட்சத்தில், மாநகராட்சியின் நச்சு வாயு வெளியீடு 5,000ஆக இருந்தால், மீதமுள்ள 5,000 கார்பன் கிரெடிட் மதிப்பை விற்பனை செய்து, வருவாய் ஈட்டலாம்.
- நமது நிருபர் -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!