Advertisement

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

ரூ.1.99 கோடியில் திட்டம்
லக்கம்பட்டியில் துவக்கம்

கோபி: லக்கம்பட்டி டவுன் பஞ்., பகுதியில், 1.99 கோடி ரூபாயில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், கோபி சேர்மன் மவுதீஸ்வரன், முன்னாள் எம்.பி.,க்கள் சத்தியபாமா, காளியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அணை பகுதியில் யானை
நடமாட்டத்தால் அச்சம்
பவானிசாகர்: பவானிசாகர் அணை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து, மாலை மற்றும் இரவு நேரங்களில், குட்டிகளுடன் பவானிசாகர் அணை மேல் பகுதியை கடந்து, யானைகள் தண்ணீர் குடிக்க வந்து செல்கின்றன. கடந்த சில நாட்களாக கூட்டம் கூட்டமாக வருவதால், அணை மற்றும் பூங்காவில் பணிபுரியும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். யானை நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர், பவானிசாகர் அணை பகுதியில் கால்நடை மேய்ப்போர் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
'கனி மார்க்கெட்டில் இடம்'
எஸ்.டி.பி.ஐ., வலியுறுத்தல்
ஈரோடு: கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள கடைகளை ஒதுக்குவதில், வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென, எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநில பொது செயலாளர் உமர் பாரூக் வலியுறுத்தினார். ஈரோட்டில் அவர் நேற்று கூறியதாவது: கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகையை குறைக்க, அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தால், அனைத்து மதத்தினரும் கடுமையாக பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
கோபியில் மருத்துவ முகாம்
கோபி: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், பொது மருத்துவ ஆலோசனை முகாம் கோபியில் நேற்று நடந்தது. நகர தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். பஜ்லுதீன் வரவேற்றார். கோபி தி.மு.க., நகர செயலாளர் நாகராஜ் முகாமை துவக்கி வைத்தார். காய்ச்சல் மற்றும் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுண் துளை அறுவை சிகிச்சை முறை குறித்து, 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
நெஞ்சுவலியால் வாலிபர் பலி
நம்பியூர்: நம்பியூர் அருகே வசந்தம் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 25; கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கோபி, நாயக்கன்காட்டில் உள்ள நண்பர் பிரசாந்த்தின், சோப்பு ஆயில் கம்பெனிக்கு நேற்று முன்தினம் மதியம் வந்தார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறிய மோகன்ராஜ் வாந்தி எடுத்தார். சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மோகன்ராஜின் தந்தை சுப்பிரமணியம் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
அகில இந்திய சித்தர்கள் மாநாடு
பவானி: சித்தோடு அருகே இரண்டு நாட்களாக, அகில இந்திய சித்தர் மாநாடு நடந்தது. ஸ்ரீயோக சித்தர் தலைமையில், அகோரிகள், சித்தர்கள் கலந்து கொண்டனர். சித்தர்களிடம் ஆசி பெற, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்தனர். இரண்டாவது நாளாக நேற்றும் நடந்த மாநாட்டுக்கு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உயிரை பறித்த 'போதை'
அந்தியூர்: கீழ்வாணி, இந்திராநகரை சேர்ந்தவர் கோகுல், 23; மரம் அறுக்கும் தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் காலை வெளியில் சென்ற கோகுல் இரவிலும் வீடு திரும்பவில்லை. நண்பர்களின் வீட்டில் தங்கியிருக்கலாம் என தாயார் ரஞ்சிதா நினைத்து விட்டார். இந்நிலையில் அத்தாணி, கைகாட்டி டாஸ்மாக் கடை அருகே ஓடைப்பள்ள நீரில், கோகுல் சடலத்தை, ஆப்பக்கூடல் போலீசார் நேற்று மீட்டனர். மது போதையால் ஓடையில் விழுந்ததில் இறந்திருக்கலாம் என தெரிகிறது.
தொழிலாளர் கருத்தரங்கு
ஈரோடு: அரசியல் சாசன தினத்தை ஒட்டியும், மூன்று வேளாண் சட்டங்களை கைவிடக்கோரியும், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க நாளை ஒட்டியும், ஈரோடு மூலப்பாளையத்தில் சிறப்பு கருத்தரங்கு நேற்று
நடந்தது.
தொழிலாளர், விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் நடந்த கருத்தரங்குக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணை செயலாளர் கிரிஜா ஆகியோர் உரையாற்றினர். கருத்தரங்கத்தில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


80 அடி சாலையில்
சைக்கிளுக்கு தனி பாதை
ஈரோடு, நவ. 28-
ஈரோட்டில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 80 அடி சாலை திட்டம் போடப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால் திட்டம் முழுமை பெறவில்லை. அதேசமயம் பெரியார் நகர் பகுதியில் மட்டும், 80 அடி சாலை திட்டம் செயலுக்கு வந்தது. இச்சாலையில் இதுவரை நடைபாதை, வாகனங்கள் சென்று வரும் பாதைகள் இருந்தன. தற்போது சைக்கிள் சென்று வர தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி பணியாளர்கள் கூறியதாவது: பெரியார் நகர், 80 அடி சாலையில் சைக்கிள் சென்று வரும் பாதைக்கு பச்சை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும், 10 அடி அகலத்துக்கு சைக்கிள் செல்லும் வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதைதான் சைக்கிள் ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
குண்டம் விழா நாளை
பூச்சாட்டுதலுடன் துவக்கம்
ஈரோடு, நவ. 28-
ஈரோடு, கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் விழா, நாளை பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. டிச.,1ம் தேதி இரவு, இரு கோவில்களின் முன்பும் கம்பம் நடப்படுகிறது. முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் டிச.,11ம் தேதி காலை, 9:௦௦ மணிக்கு நடக்கிறது. 12ம் தேதி கோவில் கரகம், 13ம் தேதி பொங்கல், மாவிளக்கு வைபவம் நடக்கிறது.
டிச.,14ம் தேதி, கம்பங்கள் பிடுங்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று, காவிரி ஆற்றில் விடப்படும். 15ம் தேதி காலை மஞ்சள் நீராடுதல், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. அன்றிரவு சுவாமி கோவில் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
2 பூங்காக்கள் திறப்பு
ஈரோடு, நவ. 28-
ஈரோடு மாநகராட்சி, 31வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமி நகர், 33வது வார்டு சக்தி நகரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 4,550 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்ட இரு பூங்காக்களை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று திறந்து வைத்தார். ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் செய்தியாளர்கள், போட்டோகிராபர், ஒளிப்பதிவாளர்களுக்கான அறையை திறந்து வைத்தார். நிகழ்வில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, துணை மேயர் செல்வராஜ், ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யூரியா கலப்பால் ஆடுகள் சாவு
சத்தியமங்கலம், நவ. 28-
தண்ணீரில் யூரியா கலந்ததால், செம்மறி ஆடுகள் பலியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாளவாடி அருகே உள்ள காமையன்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா. செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை தொட்டியில் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில், ஆடுகள் சுருண்டு விழுந்தன. அதிர்ச்சியடைந்த அவர் கால்நடை துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு சென்ற கால்நடை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். இதில் தண்ணீர் தொட்டியில் யூரியா உரம் கலந்திருப்பது தெரியவந்தது. ஐந்து ஆடுகள் பலியாகி விட்டன. நள்ளிரவில் வந்த யாரோ, ஆடுகள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் யூரியாவை போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி யூரியா கலந்த ஆசாமிகளை, தாளவாடி போலீசார் தேடி வருகின்றனர்.
காவலர் எழுத்து தேர்வில்
78 சதவீதம் பேர் பங்கேற்பு
ஈரோடு, நவ. 28-
ஈரோட்டில் நடந்த இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில், 78 சதவீதம் பேர் கலந்து கொண்டனர்.
தமிழக சீருடை பணியாளர் சார்பில், இரண்டாம் நிலை காவலர், சிறை துறை, தீயணைப்பு துறை வீரர்கள் தேர்வுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் மூன்று மையங்கள் அமைக்கப்பட்டன. 957 பெண்கள், 4,963 ஆண்கள் என, 5,920 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், 4,657 ஆண்கள்; 726 பெண்கள் மட்டுமே பங்கேற்றனர். இது, 78 சதவீதமாகும். பெண்கள் அனைவரும் ஒரே தேர்வு மையத்தில் எழுதினர். தேர்வில், 1,032 ஆண்கள், 231 பெண்கள் என, 1,263 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களில் டி.ஐ.ஜி., முத்துசாமி ஆய்வு செய்தார்.
பைக் மீது கார் மோதியதில்
மொபைல் கடைக்காரர் பலி
காங்கேயம், நவ. 28-
காங்கேயம் அருகே சிறுகிணறு பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் பூபதி, 25; மொபைல்போன் கடை வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு, பூபதியும் அவரது நண்பர் கமல்ராஜூம், காங்கயம் - - கோவை ரோட்டில், பைக்கில் சென்றனர். பூபதி பைக்கை ஓட்டினார்.
சம்மந்தம்பாளையம் பகுதி அருகே, எதிரே வந்த கார், பைக் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் நண்பர்கள் இருவருக்கும், தலை மற்றும் கை கால்களில் பலத்த அடிபட்டது. அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வரும் வழியிலேயே பூபதி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கமல்ராஜுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மூதாட்டியிடம் நகை பறித்த
பைக் கொள்ளையருக்கு வலை
தாராபுரம், நவ. 28-
தாராபுரம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த பைக் கொள்ளையரை, குண்டடம் போலீசார் தேடி வருகின்றனர்.
தாராபுரத்தை அடுத்துள்ள சின்னாரிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி மனைவி மயிலாத்தாள், 65; நேற்று முன்தினம் மாலை, குண்டடம்-உப்பாறு அணை சாலையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த மூவர், அவரிடம் வழி கேட்பது போல் பேச்சுக் கொடுத்து, அவர் போட்டிருந்த மூன்று பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். அதிர்ச்சியடைந்த மயிலாத்தாள் கூச்சல் போட்டும் பலனில்லை. மூதாட்டி புகாரின்படி குண்டடம் போலீசார், பைக் கொள்ளையரை தேடி வருகின்றனர்.
சிக்கிய பைக் திருடன்
தாராபுரம், நவ. 28-
தாராபுரத்தில் பைக் திருடிய களவாணியை, திருப்பூரில் போலீசார் கைது செய்தனர்.
தாராபுரத்தை அடுத்த கொளத்துபாளையம், ராமபட்டினத்தை சேர்ந்தவர் அயூப்கான். தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் கடை வாசலில், டூவீலரை நிறுத்தி விட்டு திருப்பூர் சென்றார். மாலையில் வந்து பார்த்தபோது காணவில்லை. புகாரின்படி தாராபுரம் போலீசார் தேடி வந்தனர். திருப்பூரில் பைக் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், பைக்கை ஓட்டிச் சென்ற, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த சேட் ருபைதீன், 43, என்பவரை கைது செய்தனர். பைக்கை பறிமுதல் செய்தனர்.
உதயநிதி பிறந்தநாள் விழா
தாராபுரத்தில் கொண்டாட்டம்
தாராபுரம், நவ. 28-
தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, தாராபுரம் உழவர் சந்தையில், மக்களுக்கு மஞ்சள் பை மற்றும் இனிப்புகளை, தி.மு.க.,வினர் வழங்கினர். அரசு மருத்துவமனையில், 80க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், ரத்ததானம் செய்தனர். முதியோர் இல்லங்களுக்கு உணவளித்தனர். தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன், 45 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி மக்களுக்கு வழங்கினர். வேம்பு, புங்கன் மரக்கன்று வழங்கினர். இதில் நகர செயலாளர் முருகானந்தம், நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குண்டாசில் இதுவரை
39 பேர் அடைப்பு
ஈரோடு, நவ. 28-
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 39 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில், போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, லாட்டரி விற்பனை, தொடர் வழிப்பறி, தொடர் திருட்டு, அடிதடி வழக்குகளில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்கின்றனர். தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில், கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
நடப்பாண்டு இதுவரை, 3௮ பேரை குண்டாசில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தேசிய பாதுகாப்பு சட்டப்பிரிவு ஒருவர் மீது பாய்ந்துள்ளது. கருங்கல்பாளையத்தில் தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வரும் நபரை, விரைவில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க, போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
குடும்ப தகராறில்
கணவன் தற்கொலை
பெருந்துறை, நவ. 28-
பெருந்துறையை அடுத்த கராண்டிபாளையம், முருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 35, தறி தொழிலாளி. இவரின் மனைவி சத்யா. இருவரும், 17 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தம்பதிக்கு, ௧௫ வயதில் மகள், ௧௩ வயதில் மகன் உள்ளனர்.
தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பழனிசாமி, வீட்டில் அனைவரும் துாங்கிய பின், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement